நடப்பாண்டு சம்பா பருவத்துக்கான உளுந்து, பச்சைப்பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உளுந்து, பச்சைப்பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விலை ஆதரவுத் திட்டமும் அமலில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து உளுந்து, பச்சைப்பயறு ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டு சம்பா பருவத்துக்கான உளுந்து, பச்சைப்பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி பச்சை பயறு ஒரு கிலோவுக்கு ரூ.87.68-ம், ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,768-ம் குறைந்த ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், சேலம், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம் உட்பட 15 மாவட்டங்களில் உள்ள பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
அதேபோல், உளுந்தை பொறுத்தவரை ஒரு கிலோ ரூ.78-ம், ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,800-ம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னை, நீலகிரி தவிர்த்து இதர மாவட்டங்களிலும் இது கொள்முதல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.