பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராவுஃப் மற்றும் சஹிப்சதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அதிகாரபூர்வமாகப் புகார் எழுப்பியுள்ளது. அதே போல் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மீது பிசிபியும் அதிகாரபூர்வ புகார் எழுப்பியுள்ளது.
கடந்த ஞாயிறன்று துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிராகக் களத்தில் இவர்களது செய்கை மற்றும் செயல்பாடுகள் மீது பிசிசிஐ புகார் எழுப்பியுள்ளது. புதன் கிழமையன்று மின்னஞ்சலில் ஐசிசிக்கு இந்தப் புகார் அனுப்பப்பட்டதாகவும் ஐசிசி அதைப் பெற்று விட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஃபர்ஹானும், ராவுஃபும் எழுத்து மூலமாக குற்றச்சாட்டுகளை மறுத்தால் ஐசிசி விசாரணை நடத்தும். இவர்கள் ஆட்ட நடுவர் டேவ் ரிச்சர்ட்சன் முன்னிலையில் ஆஜராக வேண்டும். இன்னொரு ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டும் உடனிருப்பார்.
அன்றைய தினம் ஃபர்ஹான் தன் அரைசதத்தை எடுத்து முடித்தவுடன் ரசிகர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போல் மட்டையைப் பயன்படுத்திய செய்கையும், ராவுஃப் ரசிகர்களிடத்தில் மேற்கொண்ட செய்கையும் இப்போது புகாருக்கு இடமளித்த விவகாரங்களாகும். இவர்களது செயல்கள் சமூக ஊடகங்கள் முழுதும் வைரலாகி கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் டென் டஸ்ஷாதே கூறும்போது, “சூழ்நிலை காரணமாக வீரர்கள் மீது ஏற்றப்படும் அழுத்தம் ஒரு பெரிய பிரச்சினை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடத்தையைக் கட்டுப்படுத்துவது கடினம். ஹாரிஸ் செய்த சிலபல செய்கைகளை நானும் பார்த்தேன், அது என் கவலையில்லை. நான் ஏற்கெனவே கூறியது போல் இந்திய வீரர்கள் எப்படித் தங்களை நடத்திக் கொண்டனர் என்பதில் பெருமை அடைகிறோம்.” என்றார்.
அதே போல் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது வெற்றியை பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பலியானோர் குடும்பங்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறிய சூரியகுமார் யாதவ், இந்திய ராணுவத்தின் தீரத்தையும் புகழ்ந்து பேசினார்.
இப்போது சூரியகுமார் யாதவ்வின் அத்தகைய பேச்சு ‘அரசியல்’ நோக்கம் கொண்டது என்று புகார் எழுப்பியுள்ளது.