சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமான கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்று கொளத்தூர் தொகுதியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி விழாவில் பயிற்சி முடித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
வடசென்னை பகுதியில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிஎம்டிஏ சார்பில் முரசொலி மாறன் பூங்காவை ரூ.8.20 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணி மற்றும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.13 கோடியே 95 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் ரூ. 8 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு பள்ளிக் கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் விளையாட்டுத் திடலை திறந்து வைத்தார். மேலும், சோமையா தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
அதே தெருவில் ரூ.4.19 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, பெரியார் நகர் விளையாட்டு மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 126 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களையும், 356 மகளிர்க்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
அப்போது, மாணவர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த அகாடமியில் நீங்கள் பெற்றிருக்கும் பயிற்சி, ஒரு சிறிய தொடக்கம் தான். இன்று இணையம் முழுவதும் அறிவுத் தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது. நல்ல பயனுள்ள தகவல்களை பார்த்து உங்கள் திறமையை மேலும், மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்த, கல்வியினால் பெறப்படும் அறிவைக் கொச்சைப்படுத்த பலர் செயல்படுகின்றனர்.
அவர்களின் எண்ணம், நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவர்ச்சியான சொற்களைச் சொல்லி பின்னுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்துகின்றனர். எதிர்காலத்துக்கு என்ன தேவையோ, அதை நோக்கி நீங்கள் நடைபோட வேண்டும். தமிழக மாணவர்களின் படிப்புக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது.குறிப்பாக நான் இருக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் கல்வியாகும். அதை நீங்கள் நல்ல முறையில் கற்று, வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, அ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.