திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில், நேற்று மாலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பரை ஊர்வலமாக தங்க கொடிமரத்தின் அருகே கொண்டு வந்தனர். அங்கு வேதபண்டிதர்கள் வேதங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடன் சின்னம் பொறித்த கொடி, தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இது முப்பது முக்கோடி தேவாதி தேவர்களையும் பிரம்மோற்சவத்துக்கு அழைப்பு விடுப்பதற்கான ஒரு நியதியாகும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை தினமும் காலையில் 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 9 மணி வரையிலும் உற்சவரான மலையப்பர் விதவிதமான வாகனங்களில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
இதில் ஒரு நாள் தங்க தேரோட்டத்திலும், ஒரு நாள் மர தேரிலும் பவனி வந்து காட்சி அளிக்க உள்ளார். பிரம்மோற்சவம் நடைபெறும் அனைத்து நாட்களிலும் தினமும் மதியம் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுவது ஐதீகம். இதில் இரண்டு முறை சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடத்தி, விதவிதமான அலங்காரங்களும் செய்யப்படும்.
பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா தொடங்கியதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் வந்து ஆந்திர அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். முன்னதாக நேற்று மாலை அவர் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள், அரசு, தேவஸ்தான அதிகாரிகள் உற்சகமாக வரவேற்றனர்.
அதன் பின்னர், முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தாருடன் காரில் திருமலைக்கு சென்றார். அங்கு தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அதன் பின்னர், பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று கோயிலில் தேவஸ்தான அர்ச்சகர்களிடம் அவற்றை சமர்ப்பித்தார்.
பிரம்மோற்சவ விழாவில் முதல் நாளான நேற்று இரவு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் ஆதி சேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்த வாகன சேவையில் குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாகன சேவையை காண மாட வீதிகளில் திரளான பக்தர்கள் காத்திருந்து, கோவிந்தா…கோவிந்தா என கோஷமிட்டு சுவாமியை வழிப்பட்டனர். வாகன சேவையில் காளை, குதிரை, யானை ஆகிய பரிவட்டங்கள் முன்னால் செல்ல, ஜீயர் குழுவினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை பாடியபடி செல்ல, இவர்களுக்கு பின் 28 மாநிலங்களில் இருந்து வந்திருந்த நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.