ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் 71 நக்சலைட்கள் நேற்று சரணடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், நக்சல்களின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, சரணடையும் நக்சல்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதேநேரம், 2026 மார்ச் மாதத்துக்குள் நக்சல்கள் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் 21 பெண்கள் உட்பட 71 நக்சலைட்கள் காவல் துறை மற்றும் சிஆர்பிஎப் உயர் அதிகாரிகள் முன்பு நேற்று சரணடைந்ததாக தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுரவ் ராய் தெரிவித்தார்.
இதில் 30 பேர் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு மொத்தம் ரூ.64 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சுமார் 17 வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் 2 சிறுமிகளும் சரணடைந்தவர்களில் அடங்குவர்.
இதுவரை 1,113 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். சரணடையும் நக்சல்களுக்கு முதல்கட்டமாக தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர, அரசின் கொள்கைப்படி அவர்களின் மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்படும். நேற்று முன்தினம் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த என்கவுட்டரில் 2 முக்கிய நக்சல்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், 71 பேர் சரணடைந்துள்ளனர்.