பிரிஸ்பன்: இந்தியா யு-19 மற்றும் ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா யு-19 அணி 49.4 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடக்க வீரரான வைபவ சூர்யவன்ஷி 68 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசிய நிலையில் யாஷ் தேஷ்முக் பந்தில் ஆட்டமிழந்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய விஹான் மல்ஹோத்ரா 74 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் 64 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 71 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா யு-19 அணி சார்பில் வில் பைரோம் 3, யாஷ் தேஷ்முக் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இந்த ஆட்டத்தில் 6 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் யு-19 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 10 இன்னிங்ஸில் 41 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இந்த வகையில் முன்முகுந்த் சந்த் 21 இன்னிங்ஸில் 38 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
301 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலியா யு-19 அணி 47.2 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜெய்டன் டிராப்பர் 72 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக ஆர்யன் சர்மா 38, அலெக்ஸ் டர்னர் 24 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா யு-19 அணி தரப்பில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 3, கனிஷ்க் சவுகான் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா யு-19 அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என தன் வசப்படுத்தியது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.