புதுடெல்லி: வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இந்திய தனியார் துறை சார்பில் முதல் ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இதற்கான விழாவில், மொராக்கோ பாதுகாப்பு அமைச்சர் அப்தெலதீப் லவுடி உடன் பங்கேற்றார்.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் டிஆர்டிஓ உடன் இணைந்து மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவுக்கு அருகே ராணுவ கவச வாகனங்களுக்கான (டபிள்யூஎச்ஏபி 8×8) நவீன பாதுகாப்பு உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், “தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, உள்நாட்டு தேவைகளுக்காக மட்டும் பொருட்களை உற்பத்தி செய்வது அல்ல. மாறாக உயர்தரமான நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட உறுதியான பொருட்களை உலக நாடுகளுக்காக தயாரித்து வழங்குவதும் தற்சார்பு இந்தியாவின் முக்கிய நோக்கம் ஆகும். அதனை பின்பற்றியே ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை இந்திய நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை தற்சார்பு என்பது தனிமைப்படுத்தலைக் குறிக்காது. மாறாக பிற நாடுகளைச் சார்ந்து இருக்காமல் அல்லது அவற்றின் தேவையற்ற செல்வாக்குக்கு உட்படாமல் தேசிய நலன்களின் அடிப்படையில் இறையாண்மை உள்ள முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் திறன்களை உருவாக்குவதாகும்.
மேக் இன் இந்தியா உடன் மேக் வித் பிரெண்ட்ஸ் & மேக் பார் வேர்ல்ட் ஆகியவற்றை நாங்கள் பின்பற்றுகிறோம். ஐரோப்பியாவு்க்கான நுழைவு வாயிலாக மொராக்கோ உள்ளது’’ என்றார். மொராக்கோவில் 20,000 சதுர மீட்டரில் அமைந்துள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டத்தின் பாதுகாப்பு ஆலை அடுத்த மாதம் முதல் ராயல் மொராக்கோ ராணுவத்துக்கு தேவையான ராணுவ கவச வாகனங்களை தயாரித்து வழங்க தொடங்கும்.