சென்னை: தமிழக அரசின் மின்துறை செயலராக இருந்த பீலா வெங்கடேசன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாக சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை உடல்நிலை மோசமடைந்து காலமானார். அவருக்கு வயது 56.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பீலா வெங்கடேசன், 1969-ம் நவ.11-ல் பிறந்தார். தாயார் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்துள்ளார். தந்தை வெங்கடேசன், தமிழக காவல்துறை டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். எம்பிபிஎஸ் படித்துள்ள பீலா வெங்கடேசன், கடந்த 1997-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார்.
முதலில் 1998-2000-ம் ஆண்டு வரை பிஹாரிலும் பின்னர் ஜார்கண்ட் மாநிலத்திலும் பணியாற்றினார். அதன் பிறகு தமிழகத்துக்கு மாற்றப்பட்டு 2000 முதல் 2001 வரை செங்கல்பட்டு சார் ஆட்சியராகவும், அதன்பின் 2001 மே முதல் 2002 ஆகஸ்ட் வரை முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார். தொடர்ந்து, சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை துணை செயலர் பதவி வகித்தார்.
இந்நிலையில் 2003 முதல் 2007 வரை ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின் மத்திய ஜவுளித் துறையில் 2014 வரை பணியாற்றிய நிலையில் மீண்டும் 2014 ஜூன் மாதம் தமிழகம் வந்தார். சென்னை மீன்வளத்துறை ஆணையராகவும், அதன்பின் நகர ஊரமைப்புத்துறை ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் பொறுப்புகளிலும் இருந்தார்.
கடந்த 2019 பிப்ரவரி முதல் 2020 ஜூன் மாதம் வரை கரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றினார். அதன்பின் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலர், கைத்தறித்துறை ஆணையர், நில சீர்திருத்தத்துறை ஆணையர் பொறுப்புகளை வகித்தார். இறுதியாக மின்துறை செயலராக பணியாற்றி வந்தார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸை 1992-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவரின் பெயர் பீலா ராஜேஷ் என்று மாறியது. ராஜேஷ் தாஸ் தமிழக காவல்துறையின் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றிக் கொண்டார்.
இவரது மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழக அரசின் செயலர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பல்வேறு முக்கிய துறைகளில் செயலாளராக பணியாற்றிய அனுபவமிக்கவர். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த சுகாதாரத் துறை செயலராக பணியாற்றியவர். அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உயர் அலுவலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.