மதுரை: “மதுரையில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிம வள கொள்ளையில் ஈடுபடும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பாரா?” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரசர், கல்குவாரிகளால் விவசாயிகளின் வாழ்வாதாரமும், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், விவசாய நிலங்களை பாதுகாத்து, விவசாயிகளின் உயிரை காக்க கல்குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி திருமால் கிராமத்தில் காருத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், பொதுமக்கள் கருப்பு கொடிகளை ஏற்றியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் செய்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு திருமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஆதரவளித்து போராட்டத்திலும் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருமங்கலம், சோழவந்தான் உசிலம்பட்டி உள்ளிட்ட தொகுதிகளில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடக்கிறது. ஆய்வுக்காக மதுரை வந்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிம வள கொள்ளை குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்குவாரியால் தங்களது கிராமத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், மக்களுக்கு ஆதரவாக நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உதயநிதி கனிம வள கொள்ளையில் ஈடுபடும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நாங்களே சில கோரிக்கைகளை முன்வைக்கும்போது, அதனை நிறைவேற்றாத இந்த அரசு, சாமானிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என்று அவர் கூறினார்.