பாட்னா: மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக 10 வாக்குறுதிகளை, பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி வெளியிட்டார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் பாட்னாவின் சதக்கத் ஆஸ்ரமத்தில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும், வாக்குத் திருட்டுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பது தொடர்பாகவும் இரண்டு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தொலைநோக்கு திட்டத்தின்படி 10 முக்கிய அறிவிப்புகளை ராகுல் காந்தி வெளியிட்டார்.
முக்கிய அறிவிப்புகள்: பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான தற்போதைய 20% இடஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்தப்படும். இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50% என இருப்பது நீக்கப்படும். சொந்த வீடு இல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பட்டியல் பழங்குடியின மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொள்ள நகர்ப்புறங்களில் 3 சென்ட் நிலமும், கிராமப்புறங்களில் 5 சென்ட் நிலமும் வழங்கப்படும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பட்டியல் பழங்குடியின மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும். ரூ.25 கோடி வரையிலான அரசு ஒப்பந்தங்களில் 50%, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகம், பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும். இட ஒதுக்கீட்டை மேற்பார்வையிட உயர் அதிகாரம் கொண்ட இட ஒதுக்கீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி, “பிஹாரின் பல்வேறு மாவட்டங்களில் நான் வாக்காளர் அதிகார யாத்திரையை 15 நாட்களுக்கு நான் மேற்கொண்டேன். அப்போது, இந்திய அரசியலமைப்பு தாக்கப்படுவதாக நான் குறிப்பிட்டேன். பிஹாரில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இது நடப்பதாகத் தெரிவித்தேன். நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவோம் என்பதையும், 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பை அகற்றுவோம் என்பதையும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நான் தெரிவித்திருந்தேன்” என கூறினார்.