சென்னை: தென் மண்டல ரயில்வே லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கிலோ மீட்டர் அலவன்ஸினை 25 சதவீதம் உயர்த்த வேண்டும்; கிலோ மீட்டர் அலவன்ஸுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்த வேண்டும்; பணியின் போது இயற்கை அழைப்புக்கும், உணவு இடைவேளைக்கும் நேரத்தை வரையறுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மண்டல ரயில்வே லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலியிடங்கள் பூர்த்தி செய்யாமை, நீடித்த வேலை நேரம், தொடர் இரவுப் பணிகள், போதிய ஓய்வின்மை போன்ற பிரச்னைகளை முன்னிறுத்தி போராடி வரும் லோகோ பைலட்டுகள் இந்த முறை வேறு சில கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.சி.ஜேம்ஸ், அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் தென் மண்டல ரயில்வே லோகோ பைலட்டுகள் சங்கத்தின் தலைவர் ஆர்.குமரேசன், சங்கத்தின் மத்திய அமைப்பு செயலாளர் வி.பாலசந்திரன் மற்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.