‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. இப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திரெளபதி 2’. இப்படத்தினை நேதாஜி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அரியலூரில் முடித்திருக்கிறது படக்குழு.
முதல் பாகம் போல் அல்லாமல் இப்படம் முழுமையாக வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘திரெளபதி 2’ படப்பிடிப்பு நிறைவு குறித்து மோகன்.ஜி “படப்பிடிப்பு பற்றி எவ்வளவு துல்லியமாக இயக்குநர் திட்டமிட்டாலும், தயாரிப்பாளரின் ஆதரவு வலுவாக இருக்கும்போதுதான் படம் சரியாக வரும். இதற்கு தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி சாருக்கு நன்றி. சினிமா மீதான ஆர்வம், நல்ல படங்களை ஆர்வமுடன் பார்ப்பது, சினிமா உருவாகும் முறையை புரிந்து கொள்வது என எங்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்து, முழு சுதந்திரம் அளித்ததோடு, உயர்தரத்தில் படம் வரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.” என்று தெரிவித்துள்ளார்.
14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கதையை பிரம்மாண்ட காட்சிகளுடன் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிவுற்று, டிசம்பரில் வெளியிட படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. இதில் ரக்ஷனா இந்துசுதன், நட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, நாடோடிகள் பரணி உள்ளிட்ட பலர் ரிச்சர்ட் ரிஷி உடன் நடித்துள்ளனர்.