நியூயார்க்: இந்தியா பெரும்பாலும் தங்களுடன்தான் இருக்கிறது என்றும், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே அமெரிக்காவின் ஃபாக்ஸ் டிவிக்கு பேட்டி அளித்த ஜெலன்ஸ்கி, “இந்தியா பெரும்பாலும் எங்களுடன் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விகள் இருக்கின்றன. ஆனால், அதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பார்த்துக் கொள்வார் என நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனும் இந்தியாவுடன் நெருக்கமான மற்றும் வலிமையான உறவை ஏற்படுத்துகிறது.
உக்ரைனை ஆதரிப்பதில் இருந்து இந்தியா விலகிச் செல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். அது நிகழாத வகையில் நாம் அனைத்தையும் செய்ய வேண்டும். இறுதியில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் தங்கள் அணுகுமுறையை அவர்கள்(இந்தியா) மாற்றுவார்கள்.
இந்தியாவைப் போல சீனாவை கருத முடியாது. அந்த நாடு வரலாற்று ரீதியாக ரஷ்யாவுடன் இணக்கம் கொண்டுள்ளது. சீனா, உக்ரைனுக்கு ஆதரவாகப் பேசுவது கடினம். ஏனெனில், ரஷ்யாவை ஆதரிப்பதை நிறுத்துவது சீனாவின் நலனுக்கு ஏற்றதாக இருக்காது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைனுக்கு உறுதியான ஆதரவை அளித்துள்ளார். போர் முடிவுக்கு வரும் வரை அவர் உக்ரைனை ஆதரிக்க விரும்புகிறார் என்பதை நாங்கள் கண்டுகொண்டோம். எனவே, போரை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டு வர அவரும், நாங்களும், எங்கள் மக்களும் தயாராக இருக்கிறோம். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டு வர புதின் விரும்பவில்லை என்பதை ட்ரம்ப் புரிந்து கொண்டுள்ளார்.
போர் முடிவுக்கு வரும் வரை ட்ரம்ப்பும் அமெரிக்காவும் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற தெளிவான செய்தி எங்களுக்கு கிடைத்திருப்பது, என்னை ஆச்சரியப்படுத்தியது. புதின் வெற்றி பெறவில்லை என்பது தெரியும். எனினும், தான் வெற்றி பெற்று வருவதாக அவர் கூறி வருகிறார்.” என தெரிவித்துள்ளார்.