சென்னை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரின் மரணம் தொடர்பான கொலை வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம், குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக வந்த புகாரில், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தினர், மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதன்பின்னர், வீட்டிற்கு அனுப்பப்பட்ட பழனி மரணமடைந்ததால், கோட்டூர்புரம் போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை ரங்கநாதன் புகாரில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர், அதை சைதாப்பேட்டை உதவி ஆணையருக்கு அனுப்பியுள்ளார்.
காவல்துறையினர் மீதான வழக்கு என்பதால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, அவரது கூடுதல் நேர்முக உதவியாளரும், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணையில், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினரின் தாக்குதல் தான் காரணம் என அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
அதனடிப்படையில், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் சி.ராஜேந்திரனின் புகாரை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப் பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த பி. ஆறுமுகம் தலைமை காவலர்களாக இருந்த எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன், வின்சென்ட், ஏழுமலை ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை அல்லிக்குளம் வணிக வளாகத்தில் அமைந்துள்ள 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, புகார்தாரரான சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் தரப்பில் அரசின் பெருநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.தேவபிரசாத் ஆஜராகி வாதிட்டார். வழக்கு நிலுவையில் இருந்தகாலத்தில் வின்சென்ட் மற்றும் ஏழுமலை ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி வி.பாண்டியராஜ், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினர் தாக்கியதுதான் காரணம் என விசாரணையில் நிருபணம் ஆவதாக கூறி, கோட்டூர்புரம் எஸ்.ஐ.-ஆக இருந்த பி. ஆறுமுகம் ஏட்டுகளாக இருந்த எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தார். அவர்களது குற்றங்களுக்காக எஸ்.ஐ. உள்ளிட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.