பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஷஸ் தொடர் 2025-26-க்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டர் அதிரடி மன்னன் ஹாரி புரூக் வைஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்தியா தொடர் வரை ஆலி போப் வைஸ் கேப்டனாக இருந்தார்.
பென் ஸ்டோக்ஸ் கேப்டன். அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட் இணைந்தனர். கிறிஸ் வோக்ஸ் இன்னும் தோள்பட்டைக் காயத்திலிருந்து குணமடையவில்லை என்பதால் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை. 16 அணி வீரர்கள் பட்டியலில் வில் ஜாக்ஸ் இருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக மிக முக்கியமான ஓவல் டெஸ்ட் போட்டியை தன் தோள்பட்டைக் காயம் காரணமாகத் துறந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு கேப்டனாக தொடர்கிறார். பெர்த்தில் நவம்பர் 21ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியிலேயே பென் ஸ்டோக்ஸ் ஆடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இடது கால் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம்பெறத் தவறிய மார்க் உட் இப்போது ஆஷஸ் தொடருக்குத் திரும்பியுள்ளார்.
சர்ரே அணியின் வில் ஜாக்ஸ் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் 2022-ல் 3-0 என்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வைட் வாஷ் செய்த இங்கிலாந்து அணியில் வில் ஜாக்ஸ் இருந்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
லீசெஸ்டர் ஷயரைச் சேர்ந்த, இந்தியாவில் வந்து ஆடிய லெக் ஸ்பின்னர் ரேஹன் அகமது தேர்வாகவில்லை. இவர் நல்ல பேட்டிங், பவுலிங் என்று திறமையை நிரூபித்தும் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் கூட்டணி இவரை விரும்பவில்லை.
வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்ட்டன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து காலவரையறை அற்ற விலகல் செய்திருப்பதால் மேத்யூ பாட்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதோடு நியூசிலாந்து தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளையும் இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது.
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஹாரி புரூக் (துணை கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், மார்க் வுட்.
நியூஸிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து ஒருநாள் போட்டி அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், சாம் கரன், லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், லூக் வுட்.
நியூஸிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் டி20 அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஜாக் கிராலி, சாம் கரன், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், லூக் வுட்.