குண்டூர்: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி சின்னராவூரு தோட்டா எனும் பகுதியை சேர்ந்தவர் ஷேக் இனாயத்துல்லா. இவரும் இவரது 4 நண்பர்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1996-ம் ஆண்டில், இண்டர்மீடியட் (பிளஸ்-2) படிக்கும் போது, தங்கள் பகுதியில் ஒரு சாலையின் ஓரத்தில் பசி மயக்கத்தில் பிச்சை எடுத்து வந்த ஒரு பெண்மணி மயங்கி விழுந்து கிடந்துள்ளார். அவருக்கு இவர்கள், தண்ணீர், உணவு போன்றவற்றை தினமும் வழங்கினர்.
இதனால் அப்பெண்மணி பிச்சை எடுக்கும் தொழிலையும் கைவிட்டிருந்தார். ஆனால், சிறிது நாட்களிலேயே அப்பெண்மணி மரணமடைந்தார். அந்தப் பெண்ணின் உறவினர் களில் சிலர் அதே பகுதியில் வசித்து வந்தாலும், சடலத்தை வாங்க மறுத்து விட்டனர். இதனால், ஷேக் இனாயத்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் பணத்தை செலவிட்டு, அந்தப் பெண்மணியின் ஈமச் சடங்குகளை செய்தனர். அப்போது முதற்கொண்டு இவர்கள் தொடர்ந்து இதேபோன்ற சேவைகளை செய்ய முடிவு செய்தனர்.
இதனால், உதவும் சேவகர்கள் எனும் அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் இப்போது வரை தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். இந்த குழுவில் இதுவரை 110 பேர் இணைந்துள்ளனர். அனாதைகள், சாலை ஓரமாக இறந்து கிடப்பவர்கள், ரயில், பஸ், கார் என சாலை விபத்துகளில் இறந்து போகும் அனாதைகள், வீட்டில் யாரும் உடன் இல்லாமல் தன்னந்தனியாக இறக்கும் நபர்கள், உறவினர்கள் யாரும் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லாமல் போனாலோ, அல்லது ஈமச் சடங்குக்கு பணம் இல்லாத ஏழைகள் போன்றவர்களுக்கு இக்குழுவினரே அவரவர் மதச் சடங்குகளை பின்பற்றி, ஈமச் சடங்குகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக கரோனா சமயத்தில் இறந்த பலரின் சடலங்களை இக்குழுவினர் அடக்கம் செய்துள் ளனர். இதுவரை இவர்கள் 3,787 உடல்களுக்கு ஈமச் சடங்குகள் செய்து இறுதி மரியாதை செலுத்தி உள்ளனர்.