வேளாண் துறையில் தகுதி வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் கோவை, மதுரை, கிள்ளிக்குளம் (தூத்துக்குடி), நவலூர் குட்டப்பட்டு (திருச்சி), குமுளூர் (திருச்சி), திருவண்ணாமலை, குடுமியான் மலை (புதுக்கோட்டை), ஈச்சன்கோட்டை (தஞ்சாவூர்), செட்டிநாடு (சிவகங்கை), கீழ்வேளூர் (நாகப்பட்டினம்), பையூர் (கிருஷ்ணகிரி), கரூர் ஆகிய இடங்களில் வேளாண் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேட்டுப் பாளையத்தில் வனவியல் கல்லூரி உள்ளது.
என்ன படிக்கலாம்? – வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் (ஃபாரஸ்ட்ரி), செரிகல்சர், ஃபுட் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி (ஆனர்ஸ்), பி.டெக். பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், பயோ டெக்னாலஜி ஆகிய நான்கு ஆண்டுப் படிப்புகளில் சேர விரும்புவோர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பயோ டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி, இன்ஃபர் மேட்டிக்ஸ் பிராக்டிசஸ், ஹோம் சயின்ஸ், வேளாண்மை, தோட்டக்கலை, என்விரான்மென்டல் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடத்தையும் எடுத்துப் படித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தவர்களும் இப்படிப்புகளில் சேரலாம்.
ஃபுட் டெக்னாலஜி, எனர்ஜி அன்ட் என்விரான்மெண்டல் இன்ஜினீயரிங், அக்ரிகல்சுரல் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல் இன்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெக் படிக்க விரும்புவோர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் பிராக்டிசஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடப்பிரிவை எடுத்துப் படித்தவர்களும் இப்படிப்புகளில் சேரலாம்.
கோவை வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி ஆனர்ஸ் நான்கு ஆண்டு படிப்பைத் தமிழ் வழியிலும் படிக்கலாம். வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் ஆகிய பாடப்பிரிவு களில் பி.எஸ்சி ஆனர்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினீயரிங் பாடப்பிரிவில் பிடெக் ஆகிய பாடப்பிரிவுகளில் 5 சதவீத இடங்கள் பிளஸ் டூ வகுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவு (Vocational) மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடும் உண்டு. இந்த இடஒதுக்கீட்டின் கீழ் இடம்பெறும் மாணவர்களின் படிப்புச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கிறது. தமிழக அரசு வேளாண் கல்லூரிகளில் உள்ள 20 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் நிரப்பப்படும். அதாவது, அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் வேளாண் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் CUET – UG நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விரும்புவோரும் இந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். தமிழ்நாட்டில் தனியார்க் கல்வி நிறுவனங்களிலும் தற்போது வேளாண் பட்டப் படிப்புகள் உள்ளன. அதேபோல, வேளாண் படிப்பைப் படிக்க நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் உள்ளன.
டிப்ளமோ படிப்புகள்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, அக்ரிகல்சுரல் இன்ஜினீயரிங் ஆகிய பாடப் பிரிவுகளில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம். வேளாண்மை டிப்ளமோ படிப்பைத் தமிழ் வழியிலும் படிக்க வாய்ப்பு உள்ளது. இப்படிப்பிலும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் திறந்தநிலை, தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் பல்வேறு பயிற்சிப் படிப்புகளில் டிப்ளமோ, சான்றிழ் படிப்புகளைப் படிக்கலாம்.
வேலைவாய்ப்புகள்: அரசுத் துறைகளிலும் வேளாண் விரிவாக்க மையங் களிலும் வேளாண் துறை பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும். ஃபுட் புராசசிங் தொழில் நிறுவனங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். பழ மரக்கன்று வளர்ப்பு, தேக்கு மர வளர்ப்பு, அலங்கார மலர்க்கன்றுகள் வளர்ப்பு போன்ற நர்சரி தொழிலிலும், பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டும் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.
வேளாண் படிப்பைப் படித்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வனவியல் பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் ஐ.எஃப்.எஸ் தேர்வை எழுதி அதிகாரி நிலையில் பணியில் சேரலாம். அத்துடன், வனத்துறையிலும் சுற்றுச்சூழல் துறைகளிலும் தொண்டு நிறுவனங்களிலும், காகித உற்பத்தி ஆலைகளிலும், மர சம்பந்தமான பொருள் உற்பத்தி நிறுவனங்களிலும் வனவியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வேளாண்மை தொடர்பான இளநிலைப் பட்டப் படிப்பைப் படித்து முடித்தவர்கள் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நிறுவனங்கள் உள்ளன. முதுநிலை படிப்பை முடித்தவர்களுக்கு வெளி நாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன.
– கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com