சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அதிரடி விக்கெட் கீப்பர், பேட்டர் குவிண்டன் டி காக், தான் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆட விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஓய்வு பெற்றதை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கத் தலைமை பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராடிற்கு ஆகஸ்ட் மாதம் அதிகாலை 2 மணிக்கு டி காக்கிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் டி காக் தான் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆட விரும்புவதாகவும் தெரிவித்ததாக ஷுக்ரி கான்ராட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் கொஞ்சம் பேசினோம், இரண்டொரு நாட்களில் மீண்டும் அவரைத் தொடர்பு கொள்வதாகவும் நான் தெரிவித்தேன், மேலும் சில நபர்களுடனும் பேசினேன் மீதி வரலாறு என்றார் கோச் கான்ராட்.
அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் இடம்பெறுவார் என்று தெரிகிறது. ஜூன் 2024-ல் டி காக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றார். தலைமைப் பயிற்சியாளர் கான்ராட், தென் ஆப்பிரிக்கா செலக்ஷன் கன்வீனர் பேட்ரிக் மொரோனியிடமும் டி காக் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டு மேல் நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ளார்.
சில மூத்த வீரர்களிடமும் கான்ராட், டி காக் வருகையைத் தெரிவிக்க அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்ததையும் பகிர்ந்து கொண்டார். 2023 உலகக் கோப்பையுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து டி காக் ஓய்வு பெறும் போது ராப் வால்டர் என்பவர்தான் பயிற்சியாளராக இருந்தார். அப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு அவர் மீண்டும் ஆடுவார் என்று தான் நம்பவில்லை என்று கூறினார், ஆனாலும் டி காக்கிற்காக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று கூறினார்.
“டி காக் தன் சுயமுடிவில்தான் இப்போது மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடும் விருப்பத்தைத் தெரிவித்தார். தனக்கு 32 வயதானாலும் தன்னால் இன்னும் பங்களிப்பு செய்ய முடியும் என்று என்னிடம் கூறினார். தென் ஆப்பிரிக்காவுக்கு ஆடாமல் தவறு செய்து விட்டேன், இப்போது அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஈடுகட்டுவேன் என்றார்.
அனைத்திற்கும் மேலாக டி காக் அணியில் சேர விருப்பம் தெரிவித்ததோடு அதற்காக எந்த ஒரு நிபந்தனையையும் வைக்கவில்லை.” என்றார் கான்ராட். உலகக் கோப்பைதான் ஆடுவேன், அங்கு மட்டும்தான் ஆடுவேன் இங்கு மட்டும்தான் ஆடுவேன் என்றெல்லாம் டி காக் எந்த கண்டிஷனும் போடவில்லை என்றார் கான்ராட். தன்னை எப்படிப் பயன்படுத்தினாலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆட வேண்டும் என்று மட்டுமே டி காக் கூறியுள்ளார்.
உலகக்கோப்பைகளில் அவரை அணியில் எடுப்பதா என்பது அவரது உடல் தகுதி ஃபார்ம் போன்றவையே தீர்மானிக்கும். முதலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடட்டும் பிறகு எப்படிப் போகிறதோ அதன் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்படுவார் என்று கான்ராட் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 5டி20 போட்டிகள் தொடரில் டி காக் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
டி காக் 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளபோது நிச்சயம் அவருக்கு தான் அணியில் இல்லாதது வருத்தமாகவே இருந்திருக்கும்.