பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூர் மக்களவைத் தொகுதி பாஜக எம்பி சுதாகர் பெங்களூருவில் தனது மனைவி பிரீத்தி (40) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பிரீத்திக்கு வாட்ஸ் அப் மூலம் மும்பையை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். தன்னை மும்பை இணைய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி எனக் கூறிய அவர், ‘‘உங்களது எச்.டி.எஃப்.சி வங்கி கணக்கில் சட்டவிரோத நபர்களுடன் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.
அதிலுள்ள பணத்தை உடனடியாக நாங்கள் கூறும் ‘யெஸ் வங்கி’ சோதனைக்கான வங்கிக் கணக்கில் மாற்ற வேண்டும். உடனடியாக மாற்றாவிடில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்காக உங்களை கைது செய்வோம்” என மிரட்டிள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரீத்தி உடனடியாக தன் வங்கி கணக்கில் இருந்த ரூ.14.26 லட்சத்தை, மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார்.
அதன்பிறகு தனது கணவரும் பாஜக எம்.பி.யுமான சுதாகரிடம் இதனை தெரிவித்தார். அவர், ‘இது டிஜிட்டல் அரெஸ்ட் ஆன்லைன் மோசடியாக இருக்கலாம்’ என கூறவே, பிரீத்தி பெங்களூரு மேற்கு மண்டல துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்தனர். யெஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டு, அந்த வங்கிக் கணக்கை உடனடியாக முடக்குமாறு கூறினர். இதையடுத்து பிரீத்தி சுதாகர் இழந்த ரூ.14 லட்சமும் மீட்கப்பட்டு, ஒரு வாரத்துக்குள் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
உதவிய கோல்டன் ஹவர்: இதுகுறித்து இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், ”பணத்தை இழந்த பெண் உடனடியாக தேசிய சைபர் க்ரைம் ஹெல்ப் லைன் 1930-க்கு தொடர்புகொண்டு தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் ‘கோல்டன் ஹவர்’ (பொன்னான நேரம்) எனும் நல்வாய்ப்பை பயன்படுத்தி அவரது பணத்தை வங்கியிலேயே முடக்கினர்.
கோல்டன் ஹவர் என்பது மோசடி செய்பவர் அந்த மோசடி பரிவர்த்தனையைத் தொடங்கிய சில நிமிடங்களில், பணம் முழுமையாக அவரது வங்கி கணக்குக்கு மாற்றப்படுவதற்கு முன்பான நேரம் ஆகும். அதிகப்பட்சம் 10 முதல் 30 நிமிடங்கள் இந்த நேரம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இந்த நேரத்துக்குள் புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் துரிதமாக செயல்பட்டால் இழந்த பணத்தை மீட்டெடுக்க முடியும்” என தெரிவித்தனர்.