புதுடெல்லி: பிஹார் அரசு துறைகளில் காலியாக உள்ள 1.20 லட்சம் இடங்களை நிரப்ப வேண்டும். உடனடியாக தேர்வு அட்டவணையை வெளியிடக் கோரி தலைநகர் பாட்னாவில் கடந்த 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
இந்த வீடியோவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார். அதோடு பிரதமர் நரேந்திர மோடி மரம் நடுவது, குழந்தைகளின் பாடலை கேட்பது, வனப்பகுதியை பார்வையிடுவது, மயில்களுக்கு உணவு அளிப்பது, உடற்பயிற்சி செய்வது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
வீடியோவுடன் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது. வேலைவாய்ப்பின்மைக்கும் வாக்கு திருட்டுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. மக்களின் நம்பிக்கையை பெறும் கட்சி, ஆட்சி அமைக்கிறது. அந்த ஆட்சியின் முதல் பணி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது ஆகும்.
ஆனால் மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சி அமைத்த பாஜக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை. அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.