ருத்ரபூர்: ரஷ்யாவில் படிக்கச் சென்ற உத்தராகண்ட் மாநில இளைஞர் ஒருவரை, ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து போர் முனைக்கு அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபூர் பகுதியிலுள்ள குஷ்மோத் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார் (30). இவர் அண்மையில் ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி பயில்வதற்காகச் சென்றார்.
ஆனால் அவரை ரஷ்ய ராணுவத்தினர் சிறைபிடித்து பயிற்சி அளித்து உக்ரைனுக்கு எதிராக போரிட போர்முனைக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ள ராகேஷ் குமார், தன்னை மீட்க உதவுமாறு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக ராகேஷ் குமாரின் குடும்பத்தார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்காக ராகேஷ் குமார் சென்றார். ஆனால் அவரை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்து போர்முனைக்கு அனுப்பியுள்ளனர்.
அவரை மீட்க உதவ வேண்டும். மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தின் மூலம் அவரை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
கல்வி பயில்வதற்கான விசாவில் அவர் ரஷ்யா சென்றார். அவரை வலுக்கட்டாயமாக சேர்த்து ராணுவப் பயிற்சி அளித்து போர் முனைக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.