விருதுநகர்: ‘முதல்வர் எவ்வளவோ திட்டங்களை தீட்டினாலும், அவை மக்களைச் சென்றடைய அலுவலர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்’ என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் பேசியதாவது: மக்களை தேடிச் சென்று மனுக்களை பெற்று, அவற்றுக்கு விரைவாக தீர்வுகளை வழங்க வேண்டும். பொதுமக்களை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களுக்கு வரவழைக்கும் வகையில், உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கலைஞர் விளையாட்டு உபகரணங்களை அனைத்து ஊராட்சிகளுக்கும் விநியோகித்து, அவை பயன்படுத்துவதை உறுதிசெய்ய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.
முதல்வர் எத்தனையோ திட்டங்களை தீட்டினாலும், அரசு அலுவலர்கள் சிறப்பாகச் செயல்பட்டால்தான், அந்த திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும். அரசு அலுவலர்கள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அரசு திட்டப்பணிகளில் தொய்விருந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினேன். அனைத்து திட்டங்களையும் உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 837 பயனாளிகளுக்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்கினார். மேலும், ரூ.124 கோடியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.25.89 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்தும் வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, காவல் கண்காணிப்பாளர் கண்ணன், எம்எல்ஏக்கள் சீனிவாசன், அசோகன், தங்கப்பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.