2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் அதிமுக-விடம் தோற்றுப் போனது. தேனியை தங்களுக்காக கேட்டு வாங்கிய காங்கிரஸ், அங்கு இறக்குமதி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கொண்டுபோய் நிறுத்தியதால் ஓபிஎஸ் மகனிடம் தோற்றுப் போனது. வரலாறு இப்படி இருக்க… தேனி மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியையாவது இம்முறை காங்கிரஸுக்கு ஒதுக்கவேண்டும் என கதர் பார்ட்டிகள் இப்போதே கலகக்குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தேனி (அப்போது பெரியகுளம்) மக்களவைத் தொகுதியை மட்டுமல்லாது தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது காங்கிரஸ். காலப் போக்கில் அந்த நிலைமை மாறி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இங்கு காங்கிரஸ் போட்டியிடாத நிலை நீடித்து வருகிறது. இதனால் கட்சியின் வளர்ச்சியும் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் இந்த மாவட்டத்தில் பாரம்பரியமான காங்கிரஸ் ஓட்டு வங்கி இன்னும் பத்திரமாகவே இருக்கிறது.
தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலுமே கடந்த முறை திமுக தான் போட்டியிட்டது. அதில் மூன்று தொகுதிகளில் வென்ற திமுக, போடியில் மட்டும் ஒபிஎஸ்ஸிடம் தோற்றுப் போனது. இந்த மாவட்டத்தில் கடைசியாக 1991-ல் தான் கம்பம் தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது அதிமுக. அந்தத் தேர்தலில் கம்பத்தில் வெற்றிபெற்ற ஓ.ஆர்.ராமச்சந்திரன், அடுத்து வந்த இரண்டு தேர்தல்களில் தமாகா வேட்பாளராக திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் போட்டியிட்டு கம்பம் தொகுதியை வென்றார்.
இதேபோல் போடி தொகுதியில் கடைசியாக 1984-ல் தான் போட்டியிட்டது காங்கிரஸ். அப்போது, மூப்பனாரின் தீவிர விசுவாசியான கே.எஸ்.எம்.ராமச்சந்திரன் போடிக்கு எம்எல்ஏ ஆனார். ஆண்டிபட்டி தொகுதியில் கடைசியாக 1980-ல் காங்கிரஸ் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எம்.கந்தசாமி தோற்றுப் போனார். இதேபோல் பெரியகுளம் தொகுதியில் கடைசியாக 1989-ல் போட்டியிட்ட காங்கிரஸ் கரைசேர முடியாமல் தோற்றுப் போனது.
2001-ம் ஆண்டுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு சீட் ஒதுக்குவதை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டன. கேட்டுப் பெறுவதற்கு போராட்ட குணம் உள்ள காங்கிரஸ்காரர்கள் இல்லாமல் போனதால் இன்னமும் இந்த நிலை நீடிக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட காங்கிரஸார், “தேனி மாவட்டம் முழுவதுமாக காங்கிரஸுக்கான ஓட்டு வங்கி கணிசமாக இருந்தும் அதனால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு உழைப்பதும் ஓட்டுப் போடுவதுமே தேனி மாவட்ட காங்கிரஸாருக்கு எழுதப்பட்ட விதியாகி விட்டது. எந்தக் கட்சியாக இருந்தாலும் எம்பி, எம்எல்ஏ, மந்திரி என பிரதிநிதிகள் இருந்தால் தான் கட்சி துடிப்புடன் இருக்கும்.
தேனியில் காங்கிரஸுக்கு அப்படியான பிரதிநிதிகள் வெற்றிபெற்று ரெண்டு மாமாங்கமாகி விட்டதால் கட்சியின் நிலைமை இங்கு கவலைக்கிடமாக இருக்கிறது. காலத்துக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் உப்புமூட்டை தூக்கிக் கொண்டே இருக்க வேண்டுமா என்றுகூட எங்கள் கட்சித் தலைமையிடம் காரசாரமாக கேள்வி கேட்டும் எதுவும் நடக்கவில்லை. ஆனால், இம்முறை இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியையாவது காங்கிரஸுக்கு ஒதுக்கச் சொல்லி கட்டாயமாகக் கேட்போம்” என்றனர்.
காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத் தலைவர் சன்னாசி இது தொடர்பாக நம்மிடம் பேசும்போது, “இந்த மாவட்டத்தில் காங்கிரஸுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பது கட்சியின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. எனவே, இம்முறை காங்கிரஸுக்கு கட்டாயம் ஒரு தொகுதியை ஒதுக்கச் சொல்லி திமுக தலைமையிடம் கேட்போம். 4 தொகுதிகளில் எதைக் கொடுத்தாலும் காங்கிரஸ் வெற்றிபெறும். இருப்பினும் தொகுதி எது என்பது கடைசி நேரத்தில் தான் தெரிய வரும்” என்றார்.
காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவரான சங்கரநாராயணன் நம்மிடம், “இம்முறை நான் கம்பம் அல்லது போடியில் போட்டியிட வாய்ப்புக் கேட்க இருக்கிறேன். தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கினால் தான் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையும்” என்றார். தொகுதியை கேட்டு வாங்கிவிட்டு இளங்கோவனைப் போல வெளியூர் பார்ட்டிகளை வேட்பாளராக இறக்குமதி செய்துவிடாமல் இருக்க வேண்டுமே காங்கிரஸ் தலைமை!