தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று (செப்.23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி பல்வேறு வேடமணிந்தனர்.
இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று (செப்.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணிளவில் யானை மீது வைத்து கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் காலை 6 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது. இதையடுத்து மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் கோயில் பூசாரியிடம் திருக்காப்பு கட்டினர். தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் நேர்த்தி கடன் பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலிக்க தொடங்கினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் நடைபெற்றது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, 9 மணி, 10.30 மணி, பகல் 12 மணி, 1.30 மணி, மாலை 4.30 மணி, 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.
1-ம் திருவிழாவான செப்டம்பர் 23-ம் தேதி முதல் 9-ம் திருவிழாவான அக்டோபர் 1-ம் தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு பல்வேறு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது. 6-ம் நாள் திருவிழா முதல் 10-ம் நாள் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவர்.
10-ம் நாள் திருவிழாவான அக்டோபர் 2-ம் தேதி காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து, இரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அக்டோபர் 3-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோயில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், காலை 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையைம் சென்றடைதல் நடைபெறும்.
அதிகாலை 5 மணிக்கு கோயில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோயிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் களையும் நிகழ்ச்சி நடைபெறும்.
நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது. 12-ம் நாள் திருவிழாவான அக்டோபர் 4-ம் தேதி காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு குலசேகரன்பட்டினம், உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.