கோவில்பட்டியில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் பாக முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. நகர அதிமுக செயலாளர் விஜய பாண்டியன் தலைமை வகித்தார்.
கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ பேசியதாவது: கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட திமுக வெற்றி பெற்றதே இல்லை. கோவில்பட்டியில் எந்த காலத்திலும் திமுக வெற்றி பெறாது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கோவில்பட்டி தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிற்பங்களில் சிறந்து விளங்கக் கூடிய கழுகு மலையை புராதன நகராக அறிவித்து, 2013ம் ஆண்டிலேயே அதன் வளர்ச்சிக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 100 சதவீதம் போக்குவரத்து வசதியை உறுதி செய்த ஒரே தொகுதி, தமிழகத்திலேயே கோவில்பட்டி தொகுதி மட்டும் தான்.
‘தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதி மட்டும் அதிமுக கையில் உள்ளது. அதுவும், அந்த தொகுதியில் நமது கூட்டணி வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது’ என, தமிழக முதல்வர் கூறியுள்ளார். கோவில்பட்டி தொகுதி திமுகவுக்கு சவாலாக மாறியுள்ளது.
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. அம்மா உணவகத்தையும் கிட்டத்தட்ட இழுத்து மூடிவிட்டனர். போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழ்நாடு முழுவதும் தலைவிரித் தாடுகிறது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது. வரும் தேர்தலில், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக கோவில்பட்டி தொகுதியை மாற்ற வேண்டும். அதற்கு இன்றில் இருந்து களப்பணியை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.