வள்ளியூர் சந்தையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கவும், தோரண வாயில் அமைக்கவும் அனுமதி கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மக்களின் வரிப் பணத்தில் முன்னாள் தலைவருக்கு சிலை வைத்து ஏன் துதிபாட வேண்டும்? என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவுவாயிலில் தமிழக முன்னாள் முதல்வர் கருணா நிதியின் வெண்கலச்சிலை மற்றும் அலங்கார தோரண வாயில் அமைக்க அனுமதி கோரி பால்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரியா க்ளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு, பொது இடங்களில் தலைவர்களின் சிலை அமைக்கும் விவகாரத்தில் அனைத்து தலைவர்களின் சிலைகளையும் ஒரே இடத்தில் அமைக்கும் வகையில் தலைவர்கள் பூங்கா அமைக்கத் தேவையான இடங்களை அடையாளம் காண வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு தலைவர்கள் பூங்கா உருவாகும் போது அந்த தலைவர்களின் கொள்கைகள் மற்றும் கருத்துக்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாகும். அதைவிடுத்து பொது இடங்களில் சிலை அமைத்தால் அதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன எனக்கூறி சிலை வைக்க அனுமதி மறுத்தும், அரசாணையை திரும்ப பெறுவது குறித்து அரசு பதிலளிக்கவும் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவு வாயிலில் ரூ.30 லட்சம் செலவில் புதிதாக தோரண வாயில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காவது அனுமதி வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மக்களின் வரிப் பணத்தில் முன்னாள் தலைவருக்கு ஏன் சிலை வைத்து ஏன் துதிபாட வேண்டும், என கருத்து தெரிவித்தனர். அப்போது இந்த வழக்கை திரும்பப்பெற்றுக் கொள்வதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.