சென்னை: வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தவெக தலைவரும், நடிகருமான விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 2016-17ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 என குறிப்பிட்டு இருந்தார். அதன்படி அந்த ஆண்டுக்கான வருமானத்தை மதிப்பீடு செய்த வருமான வரித்துறை கடந்த 2015ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்டது. அப்போது ‘புலி’ படத்துக்கு பெற்ற ரூ.15 கோடியை தனது வருமான கணக்கில் காட்டவில்லை என வருமானவரித் துறை குற்றம்சாட்டியது.
அதையடுத்து வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு ரூ.1.50 கோடியை அபராதமாக விதித்து வருமானவரித் துறை கடந்த 2022 ஜூன் 30 அன்று உத்தரவிட்டது. வருமான வரித் துறையின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தரப்பில், தனக்கு அபராதம் விதிப்பதாக இருந்தால் வருமானவரித் துறை சட்டத்தின்படி 2019 ஜூன் 30-ம் தேதிக்கு முன்பாக விதித்து இருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக 2022-ம் ஆண்டு வருமான வரித்துறை இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதால் அந்த உத்தரவு செல்லாது என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
பதிலுக்கு வருமான வரித்துறை தரப்பில், “வருமானவரிச் சட்டப்படிதான் நடிகர் விஜய்-க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு சரியானதுதான்” என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இதேபோன்ற மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு நகலை தாக்கல் செய்ய விஜய் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்.10-க்கு தள்ளி வைத்துள்ளார்.