சென்னை: சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக பயிற்றுவிப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டத்தில் தண்டனை பிரிவுகளை சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த பிரம்மநாயகம் ஆவுடையப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் மொழியை பயிற்றுவிக்க வேண்டுமென கட்டாய தமிழ் சட்டம் கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டு 2014 முதல் அமல்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த சட்டத்தை இந்த பள்ளிகள் முறையாக பின்பற்றுவதில்லை. தமிழக அரசும் இந்தச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கட்டாய தமிழ் சட்டத்தில் தண்டனைப்பிரிவுகள் இல்லை என்பதால் பல தனியார் பள்ளிகள் முழுமையாக அமல்படுத்துவதில்லை. பிற மாநிலங்களில் இருந்து மாறுதலாகி வரும் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பிற மாநிலங்களில் இருந்து மாறுதலாகி வரும் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்ப பாடமாக தமிழ் மொழியை படிக்கலாம் என மேலும் விலக்கு அளித்து கடந்த 2024 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது கட்டாயத் தமிழ் பாடச் சட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைப்பது போல் உள்ளது.
அந்த அரசாணை சட்டவிரோதமானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் கட்டாயத் தமிழ் மொழிப் பாடம் அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்பான முறையில் அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் சட்டத்தில் தண்டனைப் பிரிவுகளையும் சேர்க்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.