நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக்கியதில் இருந்து அமைதியாக இருந்த அண்ணாமலை, இப்போது தனது அடுத்த இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். நயினாரை ஓவர்டேக் செய்ய ஸ்கெட்ச் போடுகிறாரா அண்ணாமலை?
2021 ஜூலையில் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தனது அதிரடியான பேச்சுகளால் தமிழக அரசியலில் கவனிக்கத்தக்க நபராக மாறினார். இவரின் பேச்சுகள், இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பினை உருவாக்கியது. எனவே, அண்ணாமலை தலைவராக இருந்த காலத்தில் தமிழகத்தில் பாஜக வளர்ந்தது என்று அக்கட்சியின் நிர்வாகிகள் பலருமே சொல்லி வந்தனர்.
அண்ணாமலைக்கு ஆதரவுத் தளம் என ஒன்று உருவான காலகட்டத்தில், அவருக்கு எதிரான தளமும் தீவிரமானது. எல்லோரையும் தடாலடியாக விமர்சிப்பது, குறிப்பாக கூட்டணி கட்சியான அதிமுகவையும்கூட ‘டார்கெட்’ செய்து தாக்குவது போன்ற நடவடிக்கையால் அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி கோபமடைந்தார். இந்த மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக.
2024 மக்களவைத் தேர்தலை அண்ணாமலை தலைமையில் எதிர்கொண்ட பாஜக கூட்டணி, தமிழகத்தில் ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும் 18% வாக்குகளை பெற்று தனது பலத்தை நிரூபித்தது. இருப்பினும், 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் நிச்சயம் அதிமுகவோடு கூட்டணி சேர வேண்டும் என முடிவு செய்தார் அமித் ஷா.
இதனால்தான், இபிஎஸ்சின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலையை பதவியிலிருந்து தூக்கிவிட்டு நயினார் நாகேந்திரன் தலைவராக்கப்பட்டார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அதன்பின்னர் அண்ணாமலைக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக வெளிவரும் தகவல்கள்தான், இப்போது பாஜகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நயினாரை ஓவர்டேக் செய்கிறாரா அண்ணாமலை? – ‘அடுத்த முதல்வர் அண்ணாமலைதான்’, ‘ திமுக, அதிமுகவுக்கு மாற்று பாஜகதான்’ என்று தனது ஆதரவாளர்களை ஆழமாக நம்ப வைத்திருந்தார் அண்ணாமலை. ஆனால், திடீரென அண்ணாமலையையே தலைவர் பதவியில் இருந்து தூக்கியதை அவரின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அண்ணாமலை பதவியிலிருந்து சென்ற பிறகு, அவரின் புகழ்பாடிய பல சமூக வலைதளக் கணக்குகளும் முடங்கிப்போயின.
கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு செல்வாக்கு இருந்தாலும், ‘ஒன் மேன் ஷோ’வாக செயல்படுகிறார் என பாஜக நிர்வாகிகள் பலரும் புகைந்துகொண்டே இருந்தனர். எனவே, பதவியிலிருந்து நீக்கிய பின்னர், தேசிய தலைமைக்கு அண்ணாமலை குறித்து புகார் பட்டியல்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தனர். இதனால் பெரும்பாலான பாஜக நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த அண்ணாமலை இப்போது மீண்டும் ஆட்டத்துக்குள் வந்துள்ளார்.
அண்ணாமலையின் அடுத்த இன்னிங்ஸின் முதல் துருப்புச் சீட்டாக மாறியிருக்கிறார் தினகரன். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய தினகரன், அண்ணாமலையை புகழ்ந்து பேசியதோடு, நயினாரை கடுமையாக விமர்சித்தார். இந்தச் சூழலில்தான் தினகரனை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார் அண்ணாமலை.
இந்தச் சந்திப்பில், ‘திமுகவை வீழ்த்தும் ஒரே லட்சித்தோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்’ என தினகரனிடம் வலியுறுத்தியதாக சொல்லியுள்ளார் அண்ணாமலை. ரஜினியை நட்பு ரீதியாக அடிக்கடி சந்தித்து வருவதாகவும், ஓபிஎஸ்சையும் விரைவில் சந்திப்பேன் என்று சொல்லி தடாலடி காட்டியுள்ளார் அவர்.
அண்ணாமலையின் இந்த ‘மூவ்’ மூன்று முக்கிய விஷயங்களை சொல்கிறது. ஒன்று, ‘அண்ணாமலை கூட்டணி கட்சிகளை லாவகமாக கையாண்டார், ஆனால் நயினாரால் அது முடியவில்லை. அனைத்து தலைவர்களும் அண்ணாமலையோடு நெருக்கமாக உள்ளனர். எனவே, நயினாரை விட அண்ணாமலைதான் பெஸ்ட்’ என ஒரு பேசுபொருளை உருவாக்குவது. இன்னும் வரும் நாட்களில் தேமுதிக, பாமக தலைவர்களிடமும் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற செய்திகளும் வரலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இரண்டாவது நகர்வாக, தன்னையே மீட்பராக நம்பும் தனது ஆதரவாளர்களிடம், ‘எடப்பாடி பழனிசாமியின் எதிர்ப்பையும் தாண்டி, பாஜக தலைவர்கள் யாராலும் செய்ய முடியாத அதிமுக ஒருங்கிணைப்பை அண்ணாமலை செய்கிறார். எனவே, ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, இபிஎஸ்சுக்கும் சவால் விடுபவர் தங்கள் அண்ணாமலைதான்’ என்ற கருத்தை விதைப்பது.
மூன்றாவதாக, ஒருவேளை எப்படியேனும் வலுவான கூட்டணி அமைந்தால், அதற்கு முழுமையான காரணம் அண்ணாமலைதான் என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதுதான்.
2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், அதற்கு மறைமுக காரணம் அண்ணாமலையே என்ற பேசுபொருளை உருவாக்குவது அல்லது தோல்வியடைந்தால், அதற்கு அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து நீக்கி நயினாரை நியமித்ததே காரணம் என பேச வைப்பதுதான் இதன் பின்னால் உள்ள முக்கிய அஜெண்டா என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதெல்லாம் போதாதென்று அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறார், அதற்கு ரஜினி ஆதரவளிக்கப் போகிறார், அவர் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளது என்ற பேச்சுக்களும் எழுந்து வருகின்றன.
அண்ணாமலை தலைவராக இருந்தபோது, கட்சியின் முக்கிய விஷயங்களில் மற்ற எந்த தலைவரும் பெரிதாக தலையிட்டதில்லை. ஒருமுறை, அண்ணாமலையின் கருத்துக்கு மறு கருத்து சொன்ன மூத்த தலைவரான தமிழிசையை ஒரு விழா மேடையில் வைத்து கண்டித்தார் அமித் ஷா. ஆனால், இப்போது மாநிலத் தலைவர் நயினாரை விமர்சித்த தலைவர்களையே தனித்து சந்திக்கிறார் அண்ணாமலை.
நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை கட்டம் கட்டுகிறாரா அல்லது இவையெல்லாம் வழக்கமான நகர்வுகள்தானா என சம்பந்தபட்டவர்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும்.