ஶ்ரீவில்லிபுத்தூர்: “10 யானைகள் சேர்ந்தாலும் திமுக என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது. நேரு, ராஜாஜியை வென்ற திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை” என ஶ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியது: ”ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு காரணம் தொண்டர்கள்தான். எத்தனையோ நம்பிக்கை துரோகம், சறுக்கல்களை தாண்டி 75 ஆண்டுகளை கடந்தும் இளமையுடன் உள்ள கட்சி திமுக. 10 யானைகள் சேர்ந்தாலும் திமுக என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது.
நேரு, ராஜாஜியை எதிர்த்து வெற்றி பெற்ற திமுகவுக்கு, எதிரில் இன்று எடப்பாடி, நயினார் நாகேந்திரன் உள்ளனர். நம்மை எதிர்க்க தகுதியான எதிரிகள் தமிழ்நாட்டில் இல்லை. இன்று ஆளாளுக்கு ஒரு பேருந்தில் யாத்திரை செல்கின்றனர். 780 கோடி முறை பயணம் மேற்கொண்ட விடியல் பேருந்துதான் தமிழகத்தில் வெல்லும்.
மகளிர் உரிமை தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என்பது குறையாக உள்ளது. அதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.
தமிழகத்தை எட்டிப் பார்க்க முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் சங்கிகளும், அவர்களின் அடிமைகளும் புதுப் புது பிரச்சினைகளை கிளப்பி விட்டு வருகின்றனர். ஜெயலலிதா இறந்த பின் பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டது. மத்திய அரசு நிதி வழங்க மறுக்கும் நிலையில், இந்தி திணிப்பு என்பதால் புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
பாஜக அதிமுகவை கொத்து பரோட்டா போட்டு உள்ளது. பாஜக தில்லு முல்லு வேலை செய்துதான் பல மாநிலங்களில் ஆட்சி அமைத்து உள்ளது. அந்த வேலையை இங்கும் செய்ய முயல்வர். நாம் கவனமாக இருக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். நாம் வெற்றி பெற்றால் மேலும் பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்கள் அனைத்தையும் எளிதாக மறந்து விடுவர். உண்மையை விட பொய்யும், வதந்தியும், வேகமாக செல்லும். அதனால் நமது அரசின் சாதனைகளை அடிக்கடி மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டியது நமது கடமை.
திண்ணை பிரச்சாரத்தை முன்னெடுங்கள். மக்களிடம் குறைகளை கேட்டாலே அவர்களின் பாரம் குறைந்து விடும். மக்களுடன் நாம் நெருக்கமாக இருந்து, ஆதரவு அலையை வாக்குகளாக மாற்ற வேண்டும். 234 தொகுதிகளிலும் கருணாநிதி தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும். தமிழகம் என்றும் பாசிச சக்திக்கு எதிரானது என்பதை 2026 தேர்தலில் நிரூபிக்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.