நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல கோழிப் பண்ணை உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் கோவை வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை எம்.ஜி நகரைச் சேர்ந்தவர் பிரபல கோழிப் பண்ணை உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியம். இவர் நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் முட்டைக் கோழி மற்றும் பிராய்லர் கோழிப் பண்ணைகள் நடத்தி வருகிறார். மேலும், கோழித் தீவன ஆலை, கோழி குஞ்சு பொறிக்கும் ஹேச்சரீஸ், நிதி நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார்.
தவிர, தமிழகத்தின் பல இடங்களில் பிராய்லர் கோழிப் பண்ணைகளை அவர் இண்டகரேஷன் முறையில் நடத்தி வருகிறார். தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார். அவருக்கு சொந்தமான அலுவலகம் நாமக்கல்- திருச்சி பிரதான சாலை மற்றும் கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று 10 கார்களில் நாமக்கல் வந்த 30-க்கும் மேற்பட்ட, வருமான வரித் துறை அதிகாரிகள் திடீரென வாங்கிலி சுப்பிரமணியத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவன அலுவலகம் ஆகியவற்றின் உள்ளே புகுந்து சோதனை மேற்கொண்டனர். மாலை 5 மணியைக் கடந்தும் சோதனை நீடித்தது.
வெளியாட்கள் யாரும் அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சோதனை முடிவில் தான் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் விவரம் தெரியவரும் என வருமான வரித் துறையினர் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. சோதனை மேற்கொள்ளப்பட்ட தொழிலதிபர் வாங்கிலி சுப்பிரமணியம் இல்லம் அருகே நாமக்கல் திமுக எம்எல்ஏ ராமலிங்கம் இல்லம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.