விருதுநகர்: மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 837 பயனாளிகளுக்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ரூ.124 கோடியில் பல்வேறு புதிய திட்டப் பணிளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் ரூ.25.89 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியவது: “விருதுநகரில் சுமார் ரூ.162 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை உதவிகளை வழங்குவதில் நான் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அரசினுடைய வெற்றி உங்கள் ஒவ்வொருவருடைய முகத்தில் தெரிகின்றது. எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்று எத்தனையோ பேருக்கு பட்டா கொடுத்தாலும் இன்னைக்கு விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து விருதுநகர் மக்களுக்கு பட்டா கொடுப்பது கூடுதல் சிறப்பு.
நம்முடைய அரசு அமைந்த பிறகு சுமார் 19 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா மட்டும் உள்ளவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியுள்ளது, இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரி திட்டம். கட்டணமில்லா பேருந்துகளில் மகளிர் 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 50 லட்சம் பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளீர்கள். இந்த செப்டம்பர் வரைக்கும் 1 கோடியே 20 லட்சம் மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாயை நம்முடைய முதல்வர் வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு மகளிருக்கும் கிட்டத்தட்ட ரூ.24 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி 60 சதவிகித மனுக்கள் வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
முதல்வர் உங்களுக்காக இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறார். அதற்கு நீங்கள் நம்முடைய திராவிட ஆட்சிக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 2026-லும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த அரசு எப்போதும் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். நீங்க முதல்வருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.