கொல்கத்தா: கொல்கத்தாவில் பெய்த கனமழையால், மின்சாரம் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். நகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
வடமேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவு முதல் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரத்தில் உள்ள பல வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. கொல்கத்தா முழுவதும் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
30 விமானங்கள் ரத்து: கொல்கத்தாவில் பெய்த கனமழையால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கொல்கத்தாவின் மோசமான வானிலை காரணமாக பல்வேறு விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. “மோசமான வானிலை காரணமாக இதுவரை 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 31 விமானங்கள் தாமதமாகியுள்ளன” என்று கொல்கத்தா விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துர்கா பூஜை விடுமுறை: கொல்கத்தா மற்றும் சில மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதால், இன்று (செப்.23) முதலே அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு துர்கா பூஜை விடுமுறையை மேற்கு வங்க அரசு அறிவித்தது. கனமழையால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என அறிவுறுத்திய முதல்வர் மம்தா பானர்ஜியின் வேண்டுகோளைத் தொடர்ந்து, செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அரசு நடத்தும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு அறிவித்தார்.
துர்கா பூஜை விடுமுறை செப்டம்பர் 26 முதல் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், கனமழையால் நாளை (புதன்கிழமை) முதல் விடுமுறை தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, கொல்கத்தாவில் கனமழையால் மின்சாரம் தாக்கி 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் 25-ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவில் மற்றொரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.