பெய்ஜிங்: சர்வதேச அளவிலான திறன்மிகு வல்லுநர்களை அமெரிக்கா நிராகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அத்தகையவர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூ ஜகுன், “உலகமயமாக்கப்பட்ட உலகில் எல்லை தாண்டிய திறமை பரிமாற்றம் மிகவும் முக்கியமானது. அவர்கள்தான் உலகின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள திறமையானவர்களை சீனா வரவேற்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அவர்கள், மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் தொழில் துறை வெற்றிக்காக சீனாவில் கால் பதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
12 வகையான விசாக்களை சீனா வழங்கி வரும் நிலையில், புதிய வகை விசா ஒன்றை கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கவரும் வகையில், அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விசா அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. ‘கே’ விசா என அழைக்கப்படும் இந்த விசா, அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டது என்றும், இதன்மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம் என்றும், அதன் செல்லுபடிக் காலத்தை எளிதாக நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“கே விசா வைத்திருப்பவர்கள், கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள், அறிவியல் ஆய்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், தொழில்முனைவு மற்றும் வணிகம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக, சீன வேலை வழங்குநரோ அல்லது நிறுவனமோ அழைப்பு விடுக்க வேண்டிய தேவை இல்லை. விண்ணப்பதாரர்கள் தங்கள் வயது, கல்வி, பணி அனுபவம் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தாங்களாகவே கே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்” என்றும சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘கே’ விசாவுக்கான கட்டண விவரம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அது நிச்சயம் குறைவாகவே இருக்கும் என சீன ஊடகங்கள் கூறுகின்றன.
சர்வதேச வல்லுநர்களை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்கா வழங்கி வந்த எச்1பி விசாவின் கட்டணத்தை, அந்நாடு தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை வெளிநாட்டவர்கள் பறிப்பதற்கான ஆயுதமாக எச்1பி விசா உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் நிலைப்பாடு காரணமாக, அந்நாட்டுக்குச் செல்ல இருந்த பலரும் தங்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கி உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகள் அவர்களை தங்கள் நாட்டுக்கு அழைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சர்வதேச அளவில் திறன்பெற்ற வல்லுநர்களை ஈர்க்கும் நோக்கில் அவர்களுக்கான விசா கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய இங்கிலாந்து பரிசீலித்து வரும் நிலையில், சீனா ‘கே’ விசா குறித்த அறிவிப்பை விளம்பரப்படுத்தத் தொடங்கி உள்ளது.