சென்னை: சட்டப்பேரவைத் தொகுதிகளை கண்காணித்து அறிக்கை தரவேண்டும் என்று திமுக எம்.பி-க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: ”எம்பி.க்கள் அரசின் நலத்திட்ட முகாம்களில் பங்கேற்று பொதுமக்கள் தேவைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். குறிப்பாக, மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்டவர்களை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு எம்பி-க்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை தொடர்ந்து சந்தித்து, அவர்கள் தேவைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து தர வேண்டும். இந்த விவகாரத்தில் எம்பி.க்கள் மேற்கொண்ட பணி விவர அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை எனக்கு அளிக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சிலர் கூறியது: ”மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதில் தலைமை தீவிரமாக உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகள் வெற்றி பெறக்கூடியவை, சம வாய்ப்புள்ளவை, கடினமானவை என 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சம வாய்ப்புள்ள மற்றும் கடினமான தொகுதிகளில் களப் பணிகளை தீவிரப்படுத்தி வெற்றி பெறுவதற்காக எம்பி.க்களும் தற்போது களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் தற்போதுள்ள எம்பி.க்களுக்கு தலா 3 அல்லது 4 சட்டப்பேரவை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய தொகுதிகள் முன்னாள் எம்பி.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்படும். இவர்கள் அந்த தொகுதிகளில் ஏற்கெனவே உள்ள பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதனுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடினமான தொகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்த காரணத்தை ஆராய்ந்து சரிசெய்ய வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மாநில அரசின் நலத் திட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை முழு வீச்சில் கண்காணிக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரமாக முன்னெடுக்க தலைமை முடிவெடுத்துள்ளது” என்று திமுக நிர்வாகிகள் கூறினர்.
உடன் பிறப்பே வா சந்திப்பு: இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் உடன் பிறப்பே வா எனும் பெயரில் தொகுதி வாரியாக நிர்வாகிகளை அறிவாலயத்தில் சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். இதுவரை 17 நாட்கள் நடத்தப்பட்ட நிகழ்வுகளில் 45 தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் ‘ஒன் டூ ஒன்’ சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார். தொடர்ந்து 18-வது நாளாக நடைபெற்ற நிகழ்வில் வாசுதேவ நல்லூர், ராதாபுரம் ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது வெற்றியை இலக்காக வைத்து பணியாற்ற வேண்டுமென நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.