பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் அனைத்து திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்களில் சினிமா டிக்கெட்டின் விலையை ரூ.200 என நிர்ணயித்த மாநில அரசின் புதிய அறிவிப்புக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் சினிமா கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு சமீபத்தில் கர்நாடக சினிமா சட்டம் 1964-ல் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, ஜிஎஸ்டி இல்லாமல், சினிமா கட்டணம் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டது. அனைத்து திரையங்குகள், மல்டிபிளெக்ஸ் திரையங்குகள் ஆகியவற்றுக்கு இந்த கட்டணம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், 75-க்கும் குறைவான இருக்கைகள் கொண்ட பிரிமியம் வசதிகளைக் கொண்ட திரையரங்குகளுக்கு இந்தக் கட்டண நிர்ணயம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக அரசின் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, இந்தயி மல்டிபிளெக்ஸ் சங்கம், ஹோம்பலே பிலிமஸ், கீஸ்டோன் என்டர்டெயின்மென்ட், வி.கே. பிலிம்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. கர்நாடக சினிமா சட்டம் 1964, தியேட்டர்களின் உரிமத்தைக் கட்டுப்படுத்துவதற்கானதுதானே தவிர, சினிமா கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கானது அல்ல என்றும், இதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ரவி வி.ஹோஸ்மானி, சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டத் திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.