புதுடெல்லி: “நாட்டில் இளைஞர்களின் வேலையின்மை என்பது பாரதிய ஜனதா கட்சி செய்யும் வாக்குத் திருட்டின் நேரடி விளைவு” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியாவில் இளைஞர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்பது வேலையின்மைதான். அது, வாக்குத் திருட்டுடன் நேரடியாக தொடர்புடையது. எந்தவொரு அரசும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வரும்போது, அதன் முதல் கடமை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக இருக்கும். ஆனால், பாஜக தேர்தல்களில் நேர்மையாக வெற்றி பெறுவதில்லை. அவர்கள் வாக்குகளைத் திருடியும், ஏஜென்சிகளை கைப்பற்றியும் ஆட்சியில் நீடிப்பார்கள்.
தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஏஜென்சிகளை பாஜக கைப்பற்றியதால், நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து, ஆள்சேர்ப்பு செயல்முறைகள் சரிந்து, இளைஞர்களின் எதிர்காலம் இருளில் தள்ளப்படுகிறது. நாட்டின் இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள், கனவு காண்கிறார்கள், தங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள். ஆனால், மோடி தனது மக்கள் தொடர்பு வேலைகள், பிரபலங்களை தனது புகழைப் பாட வைப்பது மற்றும் கோடீஸ்வரர்களின் லாபம் ஆகியவற்றில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார். இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து அவர்களை விரக்தியடையச் செய்வது இந்த அரசின் அடையாளமாக மாறிவிட்டது.
இப்போது நிலைமை மாறி வருகிறது. உண்மையான போராட்டம் என்பது வேலையின்மைக்காக மட்டுமல்ல, வாக்குத் திருட்டுக்கும் எதிரானது என்பதை இந்திய இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். ஏனென்றால், தேர்தல்கள் தொடர்ந்து திருடப்படும் வரை, வேலையின்மை மற்றும் ஊழல் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இப்போது இளைஞர்கள், வேலைகள் கொள்ளையடிக்கப்படுவதையோ அல்லது வாக்குகள் திருடப்படுவதையோ பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். வேலையின்மை மற்றும் வாக்குத் திருட்டில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே இப்போது மிகப் பெரிய தேசபக்தி” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வாக்குகள் திருடப்படுவதாகவும், இதில் பாஜகவுடன், தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து சதி செய்வதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
சமீபத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார். அந்த நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள், ஓடிபி விவரங்களை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்ததும் குறிப்பிடத்தக்கது.