சென்னை: ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் திமுக ஆட்சி கொண்டாடப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அங்காடி நிர்வாகக் குழுவிற்கென (Koyambedu Market Management Committee) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளச் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பணிகளை விரைவுப்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு துறைகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செயல்படும் கோயம்பேடு அங்காடி நிர்வாகத்திற்கென புதிதாக இணையதள சேவையை இன்றைக்கு துவக்கியுள்ளோம். இந்த இணையதளத்தின் வழியாக, 3000க்கும் மேற்பட்ட கடைகள் இந்த அமைப்பில் பராமரிப்பு கட்டணம், விலைகள் நிர்ணயம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.
கோயம்பேடு மார்க்கெட்டில் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்புச் சந்தை நடைபெறும். கோயம்பேடு சந்தை பகுதியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பிலும், மெட்ரோ ரெயில் பணிகளையும் ஆயுத பூஜை திருவிழா காலத்தில் 5 நாட்கள் நிறுத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாவது பெருந்திட்ட வரைவுத் திட்டம் இந்தாண்டு இறுதி அல்லது 2026 தை மாதம் முதல் நாள் வெளியிடப்படும். முதல்வர் ஸ்டாலின் இந்த பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார், அந்த வகையில் இந்த பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு மூன்றாவது பெருந்திட்ட வரைவுத் திட்டம் 2026 தை மாதம் வெளியிடப்படும்.
கோயம்பேடு சந்தையை மேம்படுத்த மழைநீர் கால்வாய், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோயம்பேடுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் கழிவறைகளும் இலவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு சுத்தமான அங்காடியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். கடந்த காலத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக நிதி செலவிடப்படவில்லை” என்று தெரிவித்தார்.
பின்னர், `2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிகம் இடங்கள் கேட்போம்’ என்று கூறியுள்ளது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு அவர், ‘இந்த இயக்கத்தின் மூலவர், உற்சவர் எல்லாமே எங்கள் முதலமைச்சர் தான். இது போன்ற சூழல்களுக்கு உண்டான தீர்வை அவர் காண்பார்’ என்றார்.
மேலும், `அண்ணாமலை, முதலமைச்சரை விமர்சிப்பது’ தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘ இந்த ஆட்சி ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் கொண்டாடப்பட கூடிய ஆட்சியாக விளங்குகிறது. அந்த இயக்கத்தாலே ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை போன்றவர்கள் இவ்வாறு பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை’ என்று தெரிவித்தார்.