தமிழ் சினிமாவின் ‘லெஜண்ட்’களாக வலம் வந்த மூத்த இயக்குநர்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட ஓர் ஆண்டு என்றால், அது இந்த 2025 தான். பயங்கர எதிர்பார்ப்புகளோடு வெளியான மூத்த இயக்குநர்களின் படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் மீம் மெட்டிரீயலாக மாறிப் போன சோகம் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ் சினிமாவின் மாஸ்டர்கள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மணிரத்னம், கமல்ஹாசன் கூட இந்த ட்ரோல்களுக்கு தப்பவில்லை.
2024-ம் ஆண்டு ‘இந்தியன் 2’ படம் இணையத்தில் வறுத்தெடுக்கப்பட்ட பிறகு நிச்சயம் ராம்சரணை வைத்து தான் இயக்கிய ‘கேம்சேஞ்சர்’ மூலம் ஷங்கர் ஒரு அட்டகாச கம்பேக் தருவார் என்று பலரும் எதிர்பார்த்திருக்க, அப்படமும் கூட அவரை கைவிட்டுவிட்டது.
ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராகவும், ஆடியன்ஸின் பல்ஸ் அறிந்தவர் என்றும் புகழப்பட்ட ஷங்கர் அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்களை கொடுத்தது பேரதிர்ச்சி. ‘ஜென்டில்மேன்’ தொடங்கி அவரது சுமாரான படம் என்று சொல்லப்படும் ‘ஐ’ வரையில் ஏதோவொரு புதுமையை புகுத்தி பார்வையாளரை விஷுவலாக அசரவைத்தவர் ஷங்கர்.
‘முதல்வன்’ போன்ற ஒரு கதைக்களமே இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது. ‘எந்திரன்’ படம் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது. ஆனால், அவரது கடைசி இரண்டு படங்களும் எந்த புதுமைகளும் இன்றி படுதிராபையான மேக்கிங் உடன் இருந்ததாக அவரது ரசிகர்களே குமுறினர். தனது கனவுத் திரைப்படம் என்று அவர் சொல்லும் ‘வேல்பாரி’யின் மூலம் ஒரு பிரம்மாண்ட கம்பேக்கை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழில் பல தசாப்தங்கள் கடந்து தன்னை காலத்துக்கேற்ப அப்டேட் செய்து கொள்ளும் இயக்குநர்கள் மிக குறைவு. தமிழ் சினிமாவின் லெஜெண்ட்களில் ஒருவராக அறியப்படும் மணிரத்னம் தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தன்னை தொழில்நுட்ப ரீதியாக அப்டேட் செய்து கொள்வதில் வல்லவர். அவரது சுமாரான படங்களை கூட தொழில்நுட்ப ரீதியாக எந்த குறையும் சொல்லிவிட முடியாது. ஆனால், அதற்கெல்லாம் திருஷ்டியாக இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘தக் லைஃப்’ அமைந்திருந்தது என்று சொல்லலாம்.
திரைக்கதையை கூட விட்டுவிடலாம், மணிரத்னம் படங்களில் வழக்கமாக ஸ்ட்ராங்க் ஆக இருக்கும் ஒளிப்பதிவு, இசை கூட இந்தப் படத்தில் மிக சுமாராக அமைந்தது துரதிருஷ்டம். நன்றாக இருந்த பாடல்களும் கூட படத்தில் அபத்தமாக பயன்படுத்தப்பட்டிருந்தன. அதிலும் தமிழ் சினிமாவின் மற்றொரு ஆளுமையான கமல்ஹாசனுடன் மணிரத்னம் கைகோத்த ஒரு படம் இப்படி அமைந்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அடுத்து முருகதாஸ். தமிழில் ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்ற க்ளாசிக் படங்களை தந்தது மட்டுமின்றி, இந்தியில் ஆமீர்கானின் கரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றை கொடுத்தவர். ‘துப்பாக்கி’ படம் மூலம் விஜய்யின் சினிமா பாதையை மாற்றியமைத்தவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முருகதாஸ் இந்தியில் படம் இயக்குகிறார் என்ற அறிவிப்பே சினிமா ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
கூடவே, பாலிவுட்டின் மூன்று கான்களில் ஒருவரான சல்மான் கானும். ஆனால் படம் வெளியான பிறகு சல்மான் கான் வாழ்வில் இப்படி ஒரு ட்ரோலை எந்த படத்திலும் எதிர்கொண்டிருக்க மாட்டார் என்ற அளவுக்கு நெட்டிசன்கள் கொடூரமாக ட்ரோல் செய்துவிட்டனர். அந்த அளவுக்கு திரைக்கதையாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
எனினும் சில நாட்களிலேயே தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து ‘மதராஸி’ மூலம் ஒரு மீடியம் ஹிட் கொடுத்துவிட்டார். ஆனால் முருகதாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த கம்பேக் இந்தப் படத்தில் நிகழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. ஒரு மோசமான படத்துக்குப் பிறகு ஒரு சுமாரான படம் என்றளவில் தான் இந்த படம் தப்பித்திருக்கிறதே தவிர, முருகதாஸின் திரைக்கதை ஜாலம் இந்தப் படத்தில் நிகழவில்லை.
இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்கள் நினைவுகூர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கும் கிளாசிக் படங்களை கொடுத்த இந்த ‘லெஜண்ட்’ இயக்குநர்கள் சமூக வலைதளங்களில் ட்ரோலுக்கு உள்ளாவது சினிமா ரசிகர்களின் மனதை வேதனைக்குள்ளாக்குகிறது. எனினும் தங்களது அடுத்தடுத்த படங்களின் மூலம் சிறப்பான கம்பேக் தந்து இந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புவோம்.