மதுரை திருமங்கலம் – வடுகப்பட்டி 4 வழிச்சாலைப் பணிகள் நிறைவுற்று வரும் டிசம்பர் 25-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களை இணைக்கும் வகையில் மதுரை-கொல்லம் 4 வழிச்சாலைப் பணிக்கு கடந்த 2023-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இச்சாலைப் பணியில் முதற்கட்டமாக திருமங்கலம்- ராஜபாளையம் இடையிலான 71.6 கி.மீ தூரத்தினை இரண்டாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் திருமங்கலம் முதல் வடுகபட்டி வரையில் சுமார் ரூ.ரூ.541 கோடி மதிப்பீட்டில் 36 கி.மீ தூரத்துக்கு ஏற்கெனவே இருந்த சாலையை 4 வழிச் சாலையாக மாற்றியும், வளைவான சாலைகளை நேராகவும் அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2023 பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்பணிகள் சுமார் 92 சதவீதம் நிறைவுற்றுள்ளன. வரும் டிசம்பர் மாதம் பிரதமர் திறந்து வைக்கப்பட உள்ள நிலையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட அதிகாரி கூறுகையில், தமிழ்நாடு- கேரளாவை இணைக்கும் இந்த 4 வழிச்சாலை தமிழகத்தில் 129.92 கி.மீ தூரத்தினைக் கொண்டுள்ளது. இதன் மூலம் முக்கிய பொருளாதார மையங்களுக்கிடையே பயண தூரத்தைக் குறைத்து இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் 2 மாநிலங்களுக்கிடையே சரக்கு போக்குவரத்து, சுற்றுலா ஆகியவை மேம்படும்.
இதில் முதலில் பயன்பாட்டுக்கு வர உள்ள மதுரை திருமங்கலம்- வடுகப்பட்டி வரையிலான 4 வழிச்சாலைப் பணிகளில், இன்னும் 4 சுரங்கப் பாதைகள் மட்டுமே அமைக்கபட உள்ளன. இப்பணியானது கடந்த பிப்ரவரி மாதமே முடிக்க வேண்டிய நிலையில், ஆலம்பட்டி மற்றும் சுப்புலாபுரம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் போராட்டம் காரணமாக தாமதம் ஏற்பட்டது. தற்போது அப்பகுதிகளில் பொதுமக்கள் சென்று வரும் வகையில் 2 சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இந்தச் சாலையில் மொத்தம் பொதுமக்கள், வாகங்கள் செல்லும் வகையில் 16 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் முதற்கட்டமாக திருமங்கலம்- வடுகப்பட்டி வரையிலான நான்கு வழிச்சாலைப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். டிச.25ம் தேதி இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.