சமீபத்தில் 2-2 என்று சமனில் முடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் துணை கேப்டனாகப் பணியாற்றினார். மான்செஸ்டரில் நடந்த 4வது போட்டியில் கிறிஸ் வோக்ஸ் பந்தை வித்தியாசமாக ஆடப்போய் ஃபுல்டாஸை நேராக இடது பாதத்தில் வாங்கி எலும்பு முறிவு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனாலும் மீண்டும் இறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை மிட்விக்கெட்டில் வெறித்தனமாக சிக்ஸ் அடித்ததை மறக்கத்தான் முடியுமா? ரிஷப் பண்ட் இல்லாத டெஸ்ட் அணியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஒருகாலத்தில் கபில்தேவ் இல்லாத இந்திய அணியை, பிறகு சச்சின் இல்லாத இந்திய அணியை யோசித்துக் கூட பார்க்க முடியாது. அது போல்தான் இப்போது ரிஷப் பண்ட்டும்.
ஆனால் அவர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடப்போவதில்லை என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டித் தொடர் அக்டோபர் 2ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான அணித்தேர்வு செப்டம்பர் 24ம் தேதி அதாவது நாளை நடைபெறவுள்ளது. அஜித் அகார்க்கர் தலைமையிலான தேர்வுக்குழு 15 வீரர்களை தேர்வு செய்யவுள்ளது, இதில் ரிஷப் பண்ட் இடம்பெற மாட்டார்.
ரிஷப் பண்ட் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கிலாந்தில் இவர் காயமடைந்ததையடுத்து ஓவல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் நாராயண் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஸ்ட்ரெந்த் மற்றும் கண்டிஷனிங் ட்ரெயினிங்கில் இருக்கிறார் ரிஷப் பண்ட். பிசிசிஐ மருத்துவக் குழு பச்சைக் கொடி காட்டிய பின்பே அவர் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கைத் தொடங்குவார். எனவே ரிஷப் பண்ட் எப்போது மீண்டும் அணிக்குள் வருவார் என்பது தெரியவில்லை. அவருக்குப் பதிலாக டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என்பதே இப்போதைய தகவல்.
அக்டோபர் 19ம் தேதியிலிருந்து ஆஸ்திரேலியாவில் வெள்ளைப்பந்து தொடரில் இந்திய அணி ஆடுகிறது. இது மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு என்பதாலும் ரிஷப் பண்ட் வருகை இந்தத் தொடருக்கும் அல்ல என்பது புரியவருகிறது. ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணிக்குள் நுழையும் காலக்கோடு என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.
‘ஏ’ அணியிலிருந்தும் பாவப்பட்ட ஜென்மம் சர்பராஸ் கான் ஒழிக்கப்பட்டதால், தேவ்தத் படிக்கல் ஆஸ்திரேலியா-ஏ அணிக்கு எதிராக 150 ரன்கள் என்று சதம் விளாசியதால் இவரைத்தான் தேர்வு செய்வார்கள் என்பது போல் தெரிகிறது. நிதிஷ் குமார் ரெட்டிக்கும் வாய்ப்பு உண்டு.
ரிஷப் பண்ட் வரும் தேதி புரியாத புதிராக இருக்கும் போது கிட்டத்தட்ட அவரைப்போலவே மிடில் ஆர்டரில் ஆடும் சர்பராஸ் கான் தான் சரியான ரீப்ளேஸ்மெண்ட் ஆவார். ஆனால் ஸ்ரேயஸ் ஐயரைத்தான் கொண்டு வருவார்கள். சில விஷயங்கள் பிசிசிஐ-யைப் பொறுத்தவரை நிச்சயமாகச் சொல்ல முடிகிறது. பல விஷயங்கள் திரைக்குப் பின்னால் யாரோ எடுக்கும் முடிவுதான் செயலாகிறது.