தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்று திருச்சி யில் செய்தியாளர்களிடம் கூறியது: தவெக தலைவர் விஜய், 2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சி மாவட்டம் வளரவில்லை. திருவாரூர் முன்னேறவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், இந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில், ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் திருச்சி மாவட்டத்துக்கு வந்ததாக முந்தைய ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே, விஜய் பேசியதில் உண்மை இல்லை.
தமிழக முதல்வர். திருச்சி மாவட்டத்துக்கு மட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களுக்கும் நிறைய செய்துள்ளார். இதை மக்களிடம் சொல்வோம். திருவாரூருக்கு மட்டும் ரூ.2,000 கோடி திட்டங்களை முதல்வர் தந்துள்ளார். மற்றவர்கள் சொல்வதற்கு நான் பதில் கூற முடியாது. தமிழகத்தில் எத்தனை கூட்டணிகள், கட்சிகள் உருவானாலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, திமுக 7-வது முறையாக ஆட்சியில் அமரும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார்.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மணப் பாறையில் ஜாபில் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஆலை தொடங்கப்பட உள்ளது. இதில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். திருச்சியின் முகமே வேறாக மாறிவிடும்’ என்றார். தொடர்ந்து, ’புதிய கட்சி தொடங்கு பவர்கள் முதல் பல்வேறு கட்சியினரும் திமுகவை விமர்சிப்பது ஏன்’ என்ற கேள்விக்கு, மொட்டை மரம் கல்லடி படாது. காய்த்த மரம்தான் கல்லடி படும். திமுக ஒரு காய்த்த மரம் என்றார்.