சென்னை: மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைத்துள்ளது. புதிய குறைக்கப்பட்ட வரி நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையகக் கிளை மேலாளர் ஆர்.கணேஷ்: ஜிஎஸ்டி குறைப்பை அடுத்து டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என பலர் நேரடியாகவும், போன் மூலமாகவும் விசாரிக்கின்றனர். பலர் முன்பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். சிலர் வாங்கவும் செய்துள்ளனர். விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஐடி ஊழியர் ராம் பரணி: ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட முக்கியமான சில பொருட்களுக்கு வரி குறைக்கப்படவில்லை. நான் இந்த தீபாவளிக்கு டிவி, வாஷிங் மெஷின் வாங்க வேண்டுமெனத் திட்டமிட்டேன். அதில் டிவிக்கு மட்டுமே வரி குறைக்கப்பட்டுள்ளது. மற்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரியைக் குறைப்பதுடன், தொழில் நிறுவனங்கள் குறைந்தது ஓராண்டுக்கு விலையை ஏற்றாதபடி கண்காணிக்க வேண்டும்.
கார் விநியோகஸ்தர் செந்தில்நாதன்: பண்டிகையை ஒட்டி ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது நல்ல முயற்சியாகும். பெரும்பாலான மக்களுக்கு கார், பைக் வாங்கும் ஆர்வமுள்ளது. தற்போது வரி மாற்றத்தால் விலை கணிசமாக குறைந்துள்ளதால், ஷோரூம்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் விசாரிக்க வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம்.
வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மேலாளர் குலோத்துங்கன்: ஜிஎஸ்டி குறைந்தாலும் வழக்கமான விற்பனையே இருந்தது. ரூ.15 ஆயிரம் விலை உள்ள டிவி 10 சதவீத வரி குறைப்பால் ரூ.1,500 விலை குறையும். அதற்காக அந்த டிவியை மக்கள் வாங்கிவிட மாட்டார்கள். அவர்களுக்கு தேவை இருந்தால்தான் வாங்குவார்கள். இருப்பினும் எங்கள் ஷோரூமில் பொருட்களை வாங்கியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அதற்கு இந்த வரி குறைப்புதான் காரணம்.
பால் விநியோகஸ்தர் பர்ஜின்: அம்பத்தூர் பகுதியில் பால் மற்றும் பால் பொருட்களை வாங்கி வீடுகளுக்கு விநியோகம் செய்வதை பகுதி நேர வேலையாகப் பார்த்து வருகிறேன். ஒரு சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் வாடிக்கையாளர் அதிகளவில் பொருள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனால் எனக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பொறியாளர் விஸ்வ பிரியா: ஜிஎஸ்டி குறைந்ததால், அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் வாங்கும்போது விலை சற்று குறைவாக இருந்தது. பேக்கரி பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் அங்கேயும் சற்று விலை குறைந்திருந்தது. எனது நண்பர் ஒருவர் கார் வாங்கும்போது ரூ.70 ஆயிரம் சேமித்ததாகத் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் கார் வாங்கத் திட்டமிட்டிருக்கிறேன்.
கடை உரிமையாளர் பிரபாகரன்: ஜிஎஸ்டி குறைப்பை பல நாட்களாக வியாபாரிகள் எதிர்பார்த்தனர். இதனால் வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம். ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி மூலம் வாங்கி இருப்பு வைக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. ஆடம்பர பொருட்களைத் தவிர்த்து மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கு இன்னும் வரியைக் குறைத்திருக்கலாம்.
ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் ஆர். கருணாகரன்: உணவுப் பொருட்கள், அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த பலன் அடைவர். இருசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு தொழிலாளர்களுக்கு பலனை அளிக்கும். மொத்தத்தில் இந்த வரி குறைப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.