திருச்சி: துறையூர் அருகே அரசுப் பள்ளியில் முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து இளைநிலைப் பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 34 பேர் படித்து வருகின்றனர்.
2 வகுப்பறை கொண்ட கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதனிடையே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.50 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இந்த வகுப்பறை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர். அப்போது புதிய வகுப்பறை கட்டிடத்தில் மேற்கூரையில் இருந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வகுப்பறை முழுவதும் பரவிகிடந்தது. இதைப்பார்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து முசிறி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கனகராஜ், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட பொறியாளர்கள் ஆகியோர் பள்ளியில் ஆய்வு செய்தனர். மேலும், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ் ணபிரியா, அப்பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜசேகரனை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கங்காதாரிணி கூறியதாவது: பள்ளியில் மேற்கூரை சிமென்ட்பூச்சு பெயர்ந்து விழுந்த விவகாரத்தில் துறையூர் ஒன்றிய இளநிலைப் பொறியாளர்கள் பெரியசாமி, தங்கராசு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இளநிலைப் பொறியாளர் கலைச்செல்வராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிட ஒப்பந்ததாரரை கருப்புப்பட்டியலில் வைக்க நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.