மதுரை: நெல்லையில் 1712-ம் ஆண்டில் அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட செப்பு பட்டயம் அடிப்படையில் 1,100 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பள்ளி வாசல் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. செப்பு பட்டயம் அடிப்படையில் 2.34 ஏக்கர் நிலம் மட்டுமே பள்ளிவாசலுக்கு சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு கண்டியப்பேரி கான்மியா பள்ளிவாசல் உரிமை கோரிய வழக்கில் பள்ளிவாசல் முத்தவல்லிக்கு ஆதரவாக 2016 ஆகஸ்ட் 16-ல் வக்பு தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, நெல்லை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், ‘‘உருமன்குளம் வருவாய் கிராமத்தில் 3 கிராமங்களில் உள்ள 1,100 ஏக்கர் நிலத்துக்கு பள்ளிவாசல் நிர்வாகம் உரிமை கோருகிறது.
வக்பு தீர்ப்பாயத்தில் 2011-ல் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்கில் பள்ளி வாசல் தரப்பில் பட்டியலிடப்பட்ட அனைத்து சர்வே எண்களும் 1963-ம் ஆண்டின் தமிழ்நாடு இனாம் (அழிப்பு மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்ட விதிகளின் கீழ் 1966-ல் ரயத்வாரி நிலங்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த நிலங்களின் மீதான வக்பு உரிமை நீங்கியுள்ளது.
அந்த நிலங்களில் பல பகுதிகள் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 362 பேர் பட்டா அடிப்படையில் விவசாய நிலங்களாக பயன்படுத்துகின்றனர். பள்ளிவாசல் தரப்பில் செப்பு பட்டயத்தை அடிப்படையாகக் கொண்டு நிலத்துக்கு உரிமை கோரப்படுகிறது. அந்த செப்பு பட்டயத்தின் உண்மையான பிரதி இல்லை. படிவத்தை ஆவணமாகக் காட்டுகின்றனர். இது செல்லுபடியாகாது” என்றார்.
பள்ளிவாசல் மற்றும் வக்பு வாரியம் தரப்பில், “மொத்த நிலமும் மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் 1712-ல் மத தொண்டு காரியத்துக்காக வழங்கப்பட்டது. வக்புநிலம் வக்பு நிலமாகவே தொடரும். அந்த நிலங்களை அரசு புறம்போக்கு நிலங்களாக வகை மாற்றம் செய்ய முடியாது. வக்புக்கு சொந்தமான நிலத்தை வக்பு வாரியத்துக்கு தெரிவிக்காமல், விசாரணை நடத்தாமல் வகை மாற்றம் செய்ய முடியாது” எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கு சில நூற்றாண்டுகள் நீடித்த சிக்கலான வரலாற்றைக் கொண்டது. உரிமையியல் நீதிமன்றம், மேல்முறையீடு அலுவலர், வக்பு தீர்ப்பாயம் இடையே ஊசலாடிவிட்டு, தற்போது நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. வக்பு தீர்ப்பாயம் 2016-ல் பள்ளிவாசலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் பிரச்சினை செப்பு பட்டயத்தை சுற்றியே உள்ளது.
இந்த பட்டயம் மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் 1712-ல் வழங்கப்பட்டுள்ளது. அந்த செப்புப் பட்டயத்தில் உள்ள தெலுங்கு கல்வெட்டு 1925-ம் ஆண்டிலேயே படியெடுக்கப்பட்டுள்ளதால், 1712-ம் ஆண்டில் மசூதிக்கு வழங்கப்பட்ட மானியத்தை சந்தேகிக்க முடியாது.
அந்த கல்வெட்டில், இது ‘மசூதிதர்மத்துக்கான சர்வ மான்யம்’ என்றும், ‘சூரியன் மற்றும் சந்திரன் இருக் கும்வரை இது மகனிடமிருந்து பேரனுக்கு தொடரும்’ என்றும் எழுதப்பட்டுள்ளது. மதுரை சமஸ்தானத்தின் முன்னாள் ஆட்சியாளரால் வழங்கப்பட்ட வரி இல்லாத மானியம் 1865, 1866 ஆண்டுகளின் இனாம் கண்காட்சி பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மானியத்தின் மீது பள்ளிவாசலுக்கு உள்ள உரிமையை நெல்லை நீதிமன்றம் 1955 மார்ச் 8-ல் உறுதிப்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படாததால் அந்த தீர்ப்பு இறுதியானது. அதே நேரத்தில் பள்ளிவாசலுக்கான உரிமை உள்ள நிலத்தின் அளவை பொறுத்தவரை, செப்புபட்டய கல்வெட்டில் 75 கோட்டா நிலம் மட்டும் மானியமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கூகுள் தேடலில் ஒரு கோட்டா/கட்டா என்பது 0.03124 ஏக்கருக்குச் சமம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த அளவீட்டின்படி செப்பு பட்டயத்தில் பள்ளிவாசலுக்கு மொத்தம் 2.34 ஏக்கர் நிலம் மட்டுமே உரிமைப்பட்டது. அதற்கு மேல் எந்த நிலத்தையும் பள்ளிவாசல் உரிமை கோர முடியாது. எனவே பள்ளிவாசலுக்கு உரிமைப்பட்ட 2.34 ஏக்கர் நிலத்தை செப்பு பட்டய கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் எல்லைகளின் அடிப்படையில் தமிழ்நாடு வக்பு வாரியம் அடையாளம் காண வேண்டும்.
சர்வே மற்றும் எல்லைகள் சட்டம் 1923-ல் தான் நடைமுறைக்கு வந்துள்ளது. அதுவரை, நிலங்களுக்கு சர்வே எண்கள் ஒதுக்கும் நடைமுறை இல்லை. அப்படியிருக்கும் போது 1,100 ஏக்கர் நிலத்தின் ஏராளமான சர்வே எண்கள் மீது பள்ளிவாசல் எவ்வாறு உரிமை கோரியது என்பதை விளக்க தவறிவிட்டது. ஆட்சியரின் சீராய்வு மனு பகுதி ஏற்கப் படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.