புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தனது முதல் பொது நிகழ்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் உரை குறித்த புத்தக வெளீயீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டார். குடியரசு துணைத் தலைவர்களாக இருந்த எம்.வெங்கையா நாயுடு மற்றும் ஜெகதீப் தன்கர் ஆகியோரும் தங்களது பதவிக்காலத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை தொடர்பான புத்தகங்களை குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு பேசியதாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்தாலும் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் என பாராட்டி வருகிறார்.
அதேபோன்றுதான், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சர்வதேச அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் மோடியை நல்ல நண்பராக ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் சிறந்த சர்வதேச ராஜதந்திரவாதி. அதனால்தான் பிரதமர் மோடி சாத்தியமற்றதை சாத்தியமாக்கி வருகிறார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித குலத்துக்கு சேவை செய்ய உங்கள் இதயத்தில் விருப்பம் இருந்தால், தானாகவே நீங்கள் ஒரு வழியை கண்டறிவீர்கள். உலகளாவிய சக்தியாக நாம் மாறுவதற்கான விருப்பம் ஆதிக்கம் செலுத்த அல்ல. உலகளாவிய நலனுக்காக. பிரதமரின் உரைகளைப் படிக்கும்போது, பிரச்சினைகளுக்கான அணுகுமுறை, எண்ணங்களைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் மக்களின் உணர்வுகளை ஒரு சிறந்த தலைவரால் எவ்வாறு புறக்கணிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
அதுதான் பிரதமர் மோடியின் முதன்மையான முன்னுரிமை. அரசின் நலத்திட்டங்கள் சமூகத்தின் கடைசி நபரை சென்றடைவதை உறுதி செய்வதே அவரது விருப்பம். தேசத்தின் வளர்ச்சியில் பிரதமரின் பங்களிப்பு மற்றும் கனவுகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த புத்தகங்கள் முக்கியம். இவ்வாறு ராதாகிருஷ்ணன் பேசினார்.