நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அமர்வதற்கு சாலையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில், அந்த வழியாக ஆம்புலன்ஸை அனுமதிக்க வேண்டாம் என, மேடையில் மேயர் மகேஷ் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகே கடந்த 20-ம் தேதி மாலை ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.
கூட்டம் நடைபெற்ற அண்ணா விளையாட்டரங்கம் முன்னால் போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியில் நாற்காலிகள் போடப்பட்டு தொண்டர்கள் அமர்ந்திருந்தனர்.
இதனால் அவ்வழியாக நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப் படவில்லை. காவல்துறைக்கு வேண்டுகோள்கூட்டம் தொடங்கியபோது, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் பேசினார். அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.
இதைப்பார்த்த மேயர், “இனி இந்த வழியாக ஆம்புலன்ஸை அனுமதிக்க வேண்டாம். ரோடெல்லாம் இருக்கைகள் போட்டாச்சு. காவல்துறைக்கு வேண்டுகோள். மீன் மார்க்கெட் வழியாக வாகனங்களை திருப்பி விடவும். இனி ஆம்புலன்ஸ் மற்றும் அத்தனை வாகனங்களையும் மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார். அப்போது, மேடையில் அமர்ந்திருந்த கனிமொழி எம்.பி, உடனடியாக எழுந்து சென்று, ‘ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்கள்’ என மைக்கில் கூறினார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ்க்கு வழி விடப்பட்டது. இதன் பிறகு வந்த ஆம்புலன்ஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும் வடசேரி மீன் மார்க்கெட் வழியாக திருப்பி விடப்பட்டன. இந்நிலையில், கூட்டம் நடந்த இடம் வழியாக ஆம்புலன்ஸை விட வேண்டாம் என மேயர் மகேஷ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.