ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரரான சாஹிப்ஸதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் பஹீம் அஷ்ஃரப் 8 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்திருந்தது. 172 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி அபிஷேக் சர்மா 39 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசிய 74 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 28 பந்துகளில் சேர்த்த 47 (8 பவுண்டரிகள்) ரன்கள் உதவியுடன் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து மிரட்டியியிருந்தது.
லீக் சுற்றை போன்று இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸின் போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கவில்லை. மேலும் போட்டி முடிவடைந்த பின்னரும் இரு அணிகளும் கைகுலுக்கும் சம்பிரதாயங்களும் நிகழவில்லை. இது ஒருபுறம் இருக்க இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் ரீதியாக நோக்கம் கொண்ட சைகைகளைச் செய்தனர். சாஹிப்ஸதா ஃபர்ஹான் அரை சதம் அடித்ததும் தனது மட்டையை துப்பாக்கி போன்று வைத்து ரசிகர்களை நோக்கி சுடுவதை போன்று கொண்டாடினார். இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டன. சாஹிப்ஸதா ஃபர்ஹானின் செயல் விளையாட்டு அறத்தையும், மாண்பையும் சீர்குலைக்கும் வகையில் இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
இதன் பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்த போது பாகிஸ்தான் பந்து வீச்சாளரான ஷாகீன் ஷா அப்ரிடி, ஷுப்மன் கில்லையும் ஹாரிஸ் ரவூஃப் அபிஷேக் சர்மாவையும், வசைபாடி வம்புக்கு இழுத்தனர். களநடுவர் காஸி சோஹெல் உடனடியாக தலையிட்டு இவர்களை விலக்கிவிட்டார். தொடர்ந்து ஹாரிஸ் ரவூஃப் எல்லைக்கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்தபோது, இந்திய ரசிகர்கள் 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி அடித்த சிக்ஸரை நினைவுபடுத்தி, “கோலி, கோலி” என்று முழக்கமிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஹாரிஸ் ரவூஃப், ரசிகர்களை நோக்கி ‘0-6’ என கைவிரல்களை காட்டி சைகை செய்தார். மேலும், விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதைப் போல அவர், நடித்துக்காட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹாரிஸ் ரவூஃபின் செயல், கடந்த மே மாதம் நடந்த ‘சிந்தூர் ஆபரேஷன்’ ராணுவ மோதலில் பாகிஸ்தான் 6 இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக எந்தவித ஆதாரமும் இன்றி கூறிய கட்டுக்கதையை சுட்டிக்காட்டுவதுபோன்று இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
‘பிரம்மோஸ் ஏவுகணையால் பதிலடி’: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா கூறும்போது, “சாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஏகே-47 போன்று சைகை செய்தார். ஆனால் ஷுப்மன் கில்லும், அபிஷேக் சர்மாவும் தங்களது மட்டையால் ஒரு பிரம்மோஸை ஏவினர். இந்திய தொடக்க வீரர்களின் எதிர் தாக்குதல் மிகவும் அழிவுகரமானதாக இருந்ததால் பாகிஸ்தான் வீரர்கள் திகைத்துப் போனார்கள். அபிஷேக் சர்மாவும், ஷுப்மன் கில்லும் தங்களது செயல்திறனால் பேசி உள்ளனர், வாயால் அல்ல. இவர்கள் போன்ற வீரர்கள் தொடக்க வீரர்களாக இருக்கும்போது, இத்தகைய ஆடுகளத்தில் அவர்களுக்கு எதிராக 200 ரன்கள் கூட ஒரு சிறிய ஸ்கோராகத் தோன்றும். இருவரும் தரமான வீரர்கள்” என்றார்.
‘எப்படி நினைத்தாலும் கவலையில்லை’: அரை சதம் அடித்த போது துப்பாக்கியால் சுடுவது போன்று கொண்டாடியது குறித்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான சாஹிப்ஸதா ஃபர்ஹான் கூறும்போது,“அது அந்த நொடியில் நடந்தது. நான் அரை சதம் அடிக்கும் தருணங்களை அரிதாகவே கொண்டாடுகிறேன். திடீரென்று ஒரு கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது, அது அப்படித்தான் நடந்தது. மக்கள் அதை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்றார்.
ஷுப்மன் கில், அபிஷேக் பதிலடி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் நடந்து கொண்டவிதம் விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும், அபிஷேக் சர்மாவும் 4 வார்த்தைகளில் பதிலடி கொடுத்துள்ளனர். ஷுப்மன் கில் தனது எக்ஸ் வலைதள பதிவில் ‘ஆட்டம் பேசும், வார்த்தைகள் அல்ல’ என கூறி போட்டியின் சில படங்களை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் அபிஷேக் சர்மா தனது பதிவில், ‘நீங்கள் பேசுங்கள், நாங்கள் வெற்றி பெறுகிறோம்’ எனக்கூறியுள்ளார்.
‘ரைவல்ரினு சொல்லாதீங்க’: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகளை இனி எதிரி அணிகள் (ரைவல்ரி) மோதும் போட்டி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இது எனது வேண்டுகோள். 15 போட்டிகளில் விளையாடி 8-7 என முடிவுகள் இருந்தால் அது ‘ரைவல்ரி’. ஆனால் இங்கு 13-1 என்பது போன்ற நிலை உள்ளது. இது போட்டியே அல்ல” என்றார்.
சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் உலக சாம்பியனான இந்திய அணி 12 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ரவூஃபின் மனைவி சர்ச்சை பதிவு: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போல் சைகை செய்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில் அவருடைய மனைவி முஸ்னா மசூத் மாலிக் இதை ஆதரித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹாரிஸ் ரவூஃப் சைகை செய்த படத்தை வெளியிட்டு அதில், “ஆட்டத்தில் தோற்றேன்; ஆனால் போரில் வென்றேன்” என தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆட்டம்: பாகிஸ்தான் – இலங்கை, இடம்: துபாய், நேரம்: இரவு 8 மணி, நேரலை: சோனி லைவ்