வாஷிங்டன்: விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது, இந்தியாவுக்கு புறப்பட்ட மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கடந்த 19-ம் தேதி இந்தியாவுக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் இந்திய மென்பொறியாளர்கள் அதிக அளவில் இருந்தனர். அப்போது எச்1பி விசாவுக்கான கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையறிந்த இந்திய மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து உடனடியாக கீழே இறங்கினர். பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடுகளுக்கு திரும்பினர்.
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இதுதொடர்பான காட்சிகளை தனது மொபைல்போனில் படம்பிடித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். ‘‘மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இந்திய பயணிகள் அவசரமாக வெளியேறிவிட்டனர்’’ என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு வீடியோவில், பயணிகள் நடைபாதையில் குழப்பத்துடன் நிற்பதையும், சிலர் விசா கட்டணம் தொடர்பான தகவலை அறிய தங்களது மொபைல்போன்களை பதற்றத்துடன் பயன்படுத்தியதையும் பார்க்க முடிந்தது.
இந்திய பயணிகளின் இக்கட்டான சூழலை புரிந்துகொண்ட விமான கேப்டன் கூறும்போது, ‘‘அன்பான பயணிகளுக்கு! முன்னெப்போதும் இல்லாத புதிய சூழலை எதிர்கொண்டுள்ளோம். பல பயணிகள் எங்களுடன் பயணிக்க விரும்பவில்லை என்பதை அறிகிறோம். இந்தியாவுக்கு விமானம் புறப்படுவதற்கு முன்பு யார் வேண்டுமானாலும் இறங்கிச் செல்லலாம்’’ என்று அறிவித்தார். இந்த குழப்பத்தால் எமிரேட்ஸ் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
பிரிட்டனில் விசா கட்டணம் ரத்து: உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்களை ஈர்க்க பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீவிரமாக ஆலோசித்து வருவதாக முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, உயர் தொழில் திறன் பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விசா கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா கட்டணம் ரூ.90,000 முழுமையாக ரத்து செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.