ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடம், தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த ட்ரெய்லர் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. முதல் பாகம் பெற்ற வெற்றியால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ‘காந்தாரா’ படக்குழு வெளியிட்டதாக ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில், காந்தாரா சங்கல்பம் என்பது ஒரு சுய முன்னெடுப்பு என்றும், அதாவது ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் மூன்று தெய்வீக செயல்முறைகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த மூன்று தெய்வீக செயல்முறைகள்: மது அருந்தக் கூடாது, புகைப் பிடிக்கக் கூடாது அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது. திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் வரை இந்த மூன்று காரியங்களையும் செய்யக் கூடாது என்று அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த செயல்முறையில் பங்கேற்று அதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான ஒரு கூகுள் படிவமும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் கடும் வைரலாகி விட்டது. பலரும் இதனை வைத்து படக்குழுவை கிண்டல் செய்யத் தொடங்கி விட்டனர். ஆனால் படக்குழு தரப்பில் இப்படியொரு போஸ்டர் பகிரப்படவில்லை. நடிகர்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ, தயாரிப்பாளரான ஹோம்பாளே நிறுவனமோ இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது யாரோ ஒரு ரசிகர் போலி எக்ஸ் கணக்கு ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் பார்ப்பதற்கு அதிகாரபூர்வ போஸ்டர் போலவே இருந்ததால் பலரும் அதை படக்குழு வெளியிட்டதாக நினைத்து விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இன்னொரு புறம் ஒரு தவறான பதிவால் ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பும் வீணாகிவிட்டதாகவும் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வரும் அக்.2 திரையரங்குகளில் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.